தொடங்கப்பட்டதிலிருந்தே சிக்கல்கள் நீடித்து வருவதால், மீண்டும் படப்பிடிப்புக்குச் செல்லுமா 'இந்தியன் 2' படக்குழு என்ற கேள்வி தமிழ்த் திரையுலகினர் மத்தியில் எழுந்துள்ளது.
'இந்தியன் 2' படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்து, சர்ச்சையும் அதனைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. முதலில் ’பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் தில் ராஜு தான் தயாரிப்பாளர் என்று அறிவித்தார் கமல். பின்பு படத்தின் பட்ஜெட்டை எல்லாம் கணக்கில் கொண்டு தயாரிப்புப் பொறுப்பிலிருந்து விலகினார் தில் ராஜு.
உடனே லைகா நிறுவனம் தயாரிக்க முன்வந்து படத்தின் பணிகள் தொடங்கப்பட்டன. சில நாட்களிலேயே ஷூட்டிங் இடங்களைத் தேர்வு செய்ய வெளிநாடுகளுக்குப் பறந்தார் ஷங்கர். அப்போது ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்து வந்த ரவிவர்மனும் ஷங்கருடன் பறந்தார். ஆனால், சில நாட்களிலேயே ’பொன்னியின் செல்வன்’ படத்தின் ஒளிப்பதிவு வாய்ப்பினால், ’இந்தியன் 2’ படத்திலிருந்து ரவிவர்மன் விலகினார். இப்போது ரத்னவேலு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
மேக்கப்பினால் எழுந்த சிக்கல்
'இந்தியன் 2' ஷூட்டிங் தொடங்கிய சில நாட்களிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. படத்தின் கெட்டப்பிற்காக கமலுக்குப் போடப்பட்ட மேக்கப் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் சில காலம் படம் தடைப்பட்டது. அதனைச் சரி செய்து படப்பிடிப்பைத் தொடங்கினார்கள்.
முன்பே காலில் செய்த அறுவை சிகிச்சையில் வலி அதிகமாகவே மீண்டும் அறுவை சிகிச்சை செய்தார் கமல். அப்போது சில காலம் படப்பிடிப்பு தடைபட்டது. அனைத்தும் சரியாகி விட்டது என்ற சந்தோஷத்தில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 19-ம் தேதி கிரேன் அறுந்து கீழே விழுந்து 3 பேர் சம்பவ இடத்திலேயே இறக்க, 9 பேருக்குக் காயம் ஏற்பட்டது.
இந்த விபத்தால் வழக்குப் பதியப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை கமல், இயக்குநர் ஷங்கர் ஆகியோரை அழைத்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். மேலும், படத்தின் உதவி இயக்குநர்கள், விபத்தின்போது படப்பிடிப்புத் தளத்தில் இருந்தவர்கள் என அனைவரிடமும் தினமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கடிதத்தில் எழுந்துள்ள சிக்கல்
'இந்தியன் 2' படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக லைகா நிறுவனத்துக்குப் படப்பிடிப்பில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும், காப்பீடு செய்வது தொடர்பாகவும் கடிதம் ஒன்றை எழுதினார் கமல். இந்தக் கடிதம் இணையத்தில் வெளியானதால் சர்ச்சை உருவானது.
கமலுக்குப் பதிலடி கொடுக்க லைகா நிறுவனமும் கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் "இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட உடனே சுபாஸ்கரன் மற்றும் மூத்த நிர்வாகி ஒருவரும் கிடைத்த முதல் விமானத்தைப் பிடித்து சென்னை வந்தனர். நீங்கள் மார்ச்சுவரிக்குச் சென்று பார்த்த 15 நிமிடங்களுக்குப் பிறகு அங்கு சென்ற நாங்கள் அதன் பிறகு உங்கள் அலுவலகத்தோடு தொடர்ந்து பேசி வந்தோம். அந்தத் தருணத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 கோடியும் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை செலவை ஏற்றுக் கொள்வதாகவும் லைகா தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அறிவித்தார்.
இவை அனைத்தும் உங்கள் கடிதம் எங்களுக்குக் கிடைக்கும் முன்னரே நடந்தவை. துரதிர்ஷ்டவசமாக இவை யாவும் பிப். 22க்கு முன்னால் உங்கள் கவனத்துக்கு வராமல் போய்விட்டது. இயற்கையாக நடந்த இதுபோன்ற சம்பவங்களுக்கு அனைவரும் கூட்டாகப் பொறுப்பேற்றுக் கையாளப்பட வேண்டியதும் திருத்தப்பட வேண்டியதும் ஆகும்.
அனுபவமும் திறமையும் வாய்ந்த சிறந்த நடிகரும், தொழில்நுட்பக் கலைஞருமான உங்களுடைய மற்றும் முன்னணி இயக்குநரான ஷங்கருடைய சிறந்த ஈடுபாடும் பாதுகாப்பு அம்சங்கள் மீதான எங்கள் நம்பிக்கையை இரட்டிப்பாக்குகிறது” என கமலுக்கு லைகா நிறுவனம் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
'தலைவன் இருக்கின்றான்' படத்தால் எழும் சிக்கல்
'இந்தியன் 2' படத்துக்குப் பிறகு, மீண்டும் லைகா நிறுவனம் தயாரிப்பில் 'தலைவன் இருக்கின்றான்' படத்தில் நடிக்க முடிவு செய்தார் கமல். 'சபாஷ் நாயுடு' படத்துக்காகக் கொடுக்கப்பட்ட சம்பளத்தை அப்படியே 'தலைவன் இருக்கின்றான்' படத்துக்காக மாற்றி வரவு, செலவு கணக்குகளைச் சரி செய்துகொண்டது லைகா நிறுவனம். ஆனால், கமல் கடிதத்தில் வருத்தமடைந்த லைகா நிறுவனம் 'தலைவன் இருக்கின்றான்' படத்தின் தயாரிப்புப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளதாகக் கூறுகிறார்கள்.
இந்த மாற்றத்தால் கமலுக்கும் தங்களுக்கும் இடையேயான வரவு - செலவுக் கணக்குகளை 'இந்தியன் 2' படத்திலேயே முடிக்கத் திட்டமிட்டனர். ஆனால், கமலோ இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. 'இந்தியன் 2' என்பது தனிப்படம், இதற்கும் 'தலைவன் இருக்கின்றான்' படத்துக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்று தெரிவித்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் கமல் - லைகா நிறுவனம் இருவருக்கும் இடையே நடந்த கடிதப் போர், இப்போது இருவருக்கும் இடையே பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது. இதனால் திட்டமிட்டபடி 'இந்தியன் 2' படப்பிடிப்பு முடிவடைந்து வெளியாகுமா என்பது பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.
தேதிகளால் எழுந்துள்ள சிக்கல்
'இந்தியன் 2' படத்துக்காக நடிகர்கள் கொடுத்த தேதிகள், இந்த விபத்தினால் முழுக்க முடிந்துவிட்டது. இதனால், மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டாலும் கூட மறுபடியும் முதலிருந்து அனைத்து நடிகர்களிடமும் தேதிகள் வாங்க வேண்டும். அதுமட்டுமன்றி காவல்துறையினர் விசாரணை முடிந்து எவ்விதச் சிக்கலுமின்றி படப்பிடிப்பு தொடங்கப்படுமா என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால், மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டால் ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு கிடையாது என்று படக்குழு முடிவு செய்துவிட்டது.