தமிழ் சினிமா

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகும் யாருக்கும் அஞ்சேல்

செய்திப்பிரிவு

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகி வரும் படத்துக்கு ’யாருக்கும் அஞ்சேல்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தைத் தொடர்ந்து முழுக்க பெண்களை மையப்படுத்தி த்ரில்லர் படமொன்றை இயக்கியுள்ளார் ரஞ்சித் ஜெயக்கொடி. இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாகவும் முடித்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது இந்தப் படத்துக்கு 'யாருக்கும் அஞ்சேல்' என்று பெயரிடப்பட்டு, லோகோ வடிவமைப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை சிம்புவும் விஜய் சேதுபதியும் வெளியிட்டுள்ளனர். சிம்பு ட்விட்டர் தளத்தில் இல்லை என்பதால், அவரது வீட்டில் வெளியிடப்பட்ட போஸ்டர் வீடியோவினை ஹரிஷ் கல்யாண் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டார்.

'யாருக்கும் அஞ்சேல்' படத்தில் பிந்து மாதவி மற்றும் தர்ஷனா பானி இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முழுக்க ஊட்டி பின்னணியில் படமாக்கப்பட்டுள்ளது. சுமார் 30 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டது படக்குழு.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ட்ரெய்லர், இசை வெளியீடு ஆகியவை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

SCROLL FOR NEXT