சமீபத்தில் விஜய்யை சந்தித்துப் பேசியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இதனால் மீண்டும் இந்தக் கூட்டணி உருவாக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்', அவரது நடிப்பில் உருவாகும் 64-வது படமாகும். இந்தப் படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, விஜய்யின் 'தளபதி 65' படத்தை இயக்கப் போவது யார் என்பதுதான் பலருடைய கேள்வியாக இருந்தது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இதற்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்கப்பட்டன.
இறுதியில், சுதா கொங்கரா சொன்ன கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிடவே அவர் இயக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், அவர் கூறிய இறுதி வடிவம் விஜய்க்குத் திருப்தியளிக்கவில்லை என்கிறார்கள். மேலும், விஜய்யோ ஜூலையில் படப்பிடிப்பு தொடங்க வேண்டும் என்கிறாராம். ஆனால், சுதா கொங்கராவோ நவம்பரில்தான் படப்பிடிப்பு என்கிறாராம்.
இதனால் விஜய் - சுதா கொங்கரா கூட்டணி 'தளபதி 65' படத்தில் இணைய வாய்ப்பில்லை என்றும், 'தளபதி 66'-க்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. இந்த திடீர் மாற்றத்தால், 'தளபதி 65' படத்தின் இயக்குநர் யார் என்கிற கேள்வி எழுகிறது. இது தொடர்பாக விஜய்க்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது, விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணிக்கு வாய்ப்புள்ளது என்ற புதிய தகவலைச் சொன்னார்கள்.
ஏனென்றால், 'தர்பார்' படத்துக்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக இருந்தது. ஆனால், அல்லு அர்ஜுன் நடிப்பில் கடைசியான வெளியான 'அலா வைகுந்தபுரம்லோ' படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து சுகுமார் இயக்கும் படத்துக்கே இப்போதுதான் படப்பிடிப்புக்குச் செல்லவுள்ளார் அல்லு அர்ஜுன். இதனால் இந்தக் கூட்டணி இப்போதைக்கு வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது.
கடைசி 2 படங்களுமே சரியான வகையில் தனக்கான வெற்றியைக் கொடுக்காத காரணத்தால், மீண்டும் விஜய்யை சந்தித்துப் பேசியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த முறை எவ்வித சமரசமும் இல்லாமல் மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால், விஜய்யுடனான கூட்டணி தனக்குச் சரியான வகையில் இருக்கும் என்று நினைத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ் என்கிறார்கள்.
இதுவரை விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இரண்டு முறை சந்தித்துப் பேசியுள்ளது. ஆகையால், 'தளபதி 65' படத்தின் இயக்குநர்கள் பட்டியலில் இறுதியாக வந்து இணைந்து, அந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வார் ஏ.ஆர்.முருகதாஸ் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.