விரைவில் என்னைத் தமிழில் பார்ப்பீர்கள் என்று பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 'முகமூடி' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நாயகனாக நடித்த அந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் கவனம் செலுத்தத் தொடங்கினார் பூஜா ஹெக்டே.
தமிழில் முதல் படமே தோல்வி என்பதால், பூஜா ஹெக்டேவுக்கு அதற்குப் பிறகு தமிழ் வாய்ப்புகளே வரவில்லை. ஆனால், தற்போது தெலுங்கு - இந்தி திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். இதனால், தமிழில் அவரை சில படங்களில் நடிக்க வைக்க அணுகி வருகிறார்கள்.
இதனிடையே, 'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதனை தெலுங்கு மற்றும் இந்தியில் உள்ள முன்னணி இணையதளங்களில் செய்தியாக வெளியானது.
இது தொடர்பாக பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பதிவில், "என்னைத் தமிழ் சினிமாவில் பார்க்க வேண்டும் என்று பல ரசிகர்களின் ட்வீட்டுகளைப் படித்தேன். அவர்களின் அன்பு இன்ப அதிர்ச்சி. நெகிழ வைத்துவிட்டார்கள்.
தமிழ் சினிமாவில் நடிக்க நான் திட்டமிட்டு வருகிறேன் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கிறேன். என் ஆர்வத்தைத் தூண்டும் கதையில் நடிக்க விருப்பம். அதனால் தான் இந்த தாமதம். இடைவெளி. விரைவில் என்னைப் பார்ப்பீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.