தமிழ் சினிமா

உயிர் வாழ பரீட்சை முக்கியமா?- வைரலாகும் இசையமைப்பாளரின் பதிவு 

செய்திப்பிரிவு

மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதி வரும் நிலையில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். ட்விட்டரில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இத்தேர்வை 3,012 மையங்களில் 8 லட்சத்து 35 ஆயிரத்து 525 மாணவ, மாணவிகள் எழுதினர். சென்னையில் மட்டும் 160 மையங்களில் 47,264 பேர் தேர்வு எழுதுகின்றனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர், துணை முதல்வர், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தேர்வு பயத்தைப் போக்குவது எப்படி, பதற்றத்தை நீக்குவது எப்படி, என்ன மாதிரியான தயாரிப்புகள்- திட்டமிடுதல்கள் அவசியம் என பல்வேறு கோணங்களில் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மதிப்பெண்களுக்காக மட்டும் மாணவர்கள் ஓடக்கூடாது. மதிப்பான எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் உளவியல் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனாலும், தேர்வுகள் மாணவர்களை அடுத்த கட்ட நகர்வுக்கு அழைத்துச் செல்லும் என்பதால் அதுகுறித்த இறுக்கத்துடன் மாணவர்கள் இருப்பதை மறுக்க முடியாது.

இந்நிலையில் தேர்வு மட்டுமே மாணவர்களின் வாழ்க்கையைத் தீர்மானித்துவிடாது என்பதை உணர்த்தும் விதமாக சென்னையில் உள்ள ஒரு கடையில் ஒரு அறிவிப்பு தொங்கவிடப்பட்டது. அதில், ''அடேய் பசங்களா.... உயிர் வாழ்வதற்குத் தேவையான அளவுக்கு பரீட்சை முக்கியமான விஷயம் அல்ல... ஜாலியா எழுதுங்கடே'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுநலன் கருதி இதனைப் பகிர்ந்த இசையமைப்பாளர் சாமுக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT