கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற பெல் பாட்டம் திரைப்படம், இந்தியைத் தொடர்ந்து தமிழிலும் ரீமேக் ஆகவுள்ளது.
ஜெயதீர்தா இயக்கத்தில் ரிஷப் ஷெட்டி, ஹரிப்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் கன்னடத்தில் வெளியான படம் 'பெல் பாட்டம்'. 2019-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கைக் கைப்பற்றி அக்ஷய் குமார் நாயகனாக நடித்து வருகிறார்.
தற்போது இதன் தமிழ் ரீமேக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சத்யசிவா இயக்கத்தில் உருவாகும் ரீமேக்கில் கிருஷ்ணா நாயகனாக நடிக்கவுள்ளார். இந்தக் கூட்டணி இதற்கு முன்பாக 'கழுகு' மற்றும் 'கழுகு 2' ஆகிய படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளது. நாயகியாக மஹிமா நம்பியார் ஒப்பந்தமாகியுள்ளார். 'பருத்தி வீரன்' சரவணன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இசையமைப்பாளராக சாம் சி.எஸ், ஒளிப்பதிவாளராக ராஜா பட்டாசார்ஜி, எடிட்டராக கோபி கிருஷ்ணா ஆகியோர் பணிபுரியவுள்ளனர். சார்லஸ் இம்மானுவேல் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளார்.