தமிழ் சினிமா

நானும் அந்தப் பிரச்சினையைச் சந்தித்தேன்: வரலட்சுமி சரத்குமார் 

செய்திப்பிரிவு

நானும் அந்தப் பிரச்சினையைச் சந்தித்தேன் என்று வரலட்சுமி சரத்குமார் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான 'போடா போடி' படத்தின் சிம்புவுக்கு நாயகியாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். தமிழ், தெலுங்கு, மலையாளர் மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். இதுவரை 25 படங்களில் நடித்து முடித்துள்ளார்.

வரும் மார்ச் 5-ம் தேதி தனது பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடவுள்ளார் வரலட்சுமி சரத்குமார். மேலும், தனது பிறந்த நாளை முன்னிட்டு பேட்டிகளும் அளித்து வருகிறார். இதில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், தன்னையும் வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைத்தார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

இது தொடர்பாக வரலட்சுமி சரத்குமார் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

வாய்ப்பு தருவதற்காகப் படுக்கைக்கு அழைக்கும் பிரச்சனை எனக்கும் வந்தது. ஆனால் அதை நான் வெளியில் கொண்டு வந்து விட்டேன். நான் இவை அனைத்தையும் எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால் ‘முடியாது’ என்று சொல்லக் கற்றுக் கொண்டேன். சரத்குமாரின் மகள் என்பதைத் தாண்டியும் அந்த பிரச்சனைகள் எனக்கு நடந்தது.

இது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்புகளும் என்னிடம் இருக்கிறது. எனக்கு வெற்றி தாமதமாகத்தான் கிடைத்தது. ஒப்புக் கொள்கிறேன். சிலர் என்னை ஒதுக்கினார்கள். ஏனென்றால் நான் மிகவும் சரியாக இருக்கிறேன். ஆனாலும் பரவாயில்லை. இன்று நான் 25 படங்களில் நடித்து முடிந்திருக்கிறேன். 25 நல்ல தயாரிப்பாளர்கள், 25 நல்ல இயக்குநர்களோடு பணிபுரிந்துவிட்டு தற்போது என்னுடைய 29வது படத்துக்கு ஒப்பந்தமாகியிருக்கிறேன்.

இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பெண்கள் முதலில் சரி என்று சொல்லிவிட்டு அதன்பிறகு வந்து புகார் செய்து பயனில்லை. முதலிலேயே முடியாது என்று சொல்லுங்கள். இதுதான் நான் சொல்ல விரும்புவது.

இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT