பாலா இயக்கத்தில் உருவான 'வர்மா' திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டுள்ளதால், திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
கிரிசாயா இயக்கத்தில் த்ருவ் விக்ரம், பனிட்டா சந்து, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஆதித்ய வர்மா'. இது தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்காகும். 'ஆதித்ய வர்மா' உருவாவதற்கு முன்பு, இந்த ரீமேக்கை 'வர்மா' என்ற பெயரில் இயக்கினார் பாலா. அதில் த்ருவ் விக்ரம், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆனால் அதன் இறுதி வடிவம் சரிவரத் திருப்தி தராததால், அந்தப் படத்தைக் கைவிட்டுவிட்டார்கள்.
பின்பு, 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் முதல்நிலை உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிரிசாயா இயக்கத்தில் 'ஆதித்ய வர்மா' படம் உருவானது. ஆனால் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் வசூல் ரீதியில் வரவேற்பைப் பெறவில்லை. இதனால், படக்குழு சோகமானது.
இதனிடையே, தற்போது 'வர்மா' படம் சிங்கப்பூர் தணிக்கையில் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள தணிக்கை விதிமுறைகளின்படி 16-வயதுக்குக் கீழ் இருப்போர் இந்தப் படத்தைப் பார்க்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளனர். மேலும், படத்தின் கதைக்களம் உள்ளிட்ட விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த தணிக்கை விவரங்கள் வெளியீட்டால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் 'வர்மா' படத்தை வெளியிட்டு, நஷ்டத்தைச் சரிசெய்யவுள்ளார்களா என்ற கேள்வி எழுகிறது. இந்த தணிக்கைச் சர்ச்சை தொடர்பாகப் படக்குழுவினரிடம் கேட்ட போது, யாரும் எந்தவொரு தகவலுமே தெரிவிக்கவில்லை. முன்னதாக, தான் இயக்கிய 'வர்மா' படத்திலிருந்து எந்தவொரு காட்சியையும் 'ஆதித்ய வர்மா' படத்துக்கு உபயோகிக்கக் கூடாது என விக்ரமுக்கு பாலா கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது