விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவினை, மார்ச் 15-ம் தேதி வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் லலித் குமார் கைப்பற்றியுள்ளார். ஏப்ரல் 9-ம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டு அனைத்து வகையிலான விளம்பரப் பணிகளும் விரைவில் தொடங்கவுள்ளது.
தற்போது வரை சென்னையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இன்னும் 2 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருப்பதாகவும், விஜய் - விஜய் சேதுபதி இணைந்து வரும் காட்சிகள் நெருப்பு மாதிரி இருக்கும் எனவும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சென்னையில் மார்ச் 15-ம் தேதி நடத்தப் படக்குழு முடிவு செய்துள்ளது. இங்குள்ள பிரபலமான 5 நட்சத்திர ஹோட்டலில் ரசிகர்கள் இல்லாமல், பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் இந்த விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவின் உரிமையினை சன் தொலைக்காட்சி இப்போதே கைப்பற்றியுள்ளது.
இன்றுடன் (பிப்ரவரி 29) விஜய்க்கான காட்சிகளின் படப்பிடிப்பு முடிகிறது. விஜய் தவிர்த்து இதர நடிகர்களின் டப்பிங் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகன், வி.ஜே.ரம்யா, சாந்தனு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.