சிம்பு இல்லாமல் 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' வாய்ப்பில்லை என்று இயக்குநர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. 2010-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான இந்தப் படத்தின் பாடல்கள் இப்போதும் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் வெளியாகி நேற்றுடன் (பிப்ரவரி 26) 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதனை முன்னிட்டு ட்விட்டர் தளத்தில் #10YearsOfVTV மற்றும் #VinnaithaandiVaruvaayaa ஆகிய ஹேஷ்டேகுகள் இந்திய அளவில் ட்ரெண்டாகின.
மேலும், மாலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார் கவுதம் மேனன். அப்போது பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார். அதில் 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' குறித்த கேள்வியும் எழுப்பப்பட்டது.
அதற்கு, 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' படத்தின் கதையை நிறைய பேருடைய எண்ணங்களைக் கொண்டு எழுதியதாகவும், அந்தக் கதைக்குத் தனது நண்பர்கள், கதாசிரியர்கள் என பல பேருடைய உழைப்பு அடங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் கவுதம் மேனன். சிம்பு அந்தக் கதைக்கு ஒ.கே. சொன்னால் கண்டிப்பாக 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' உருவாகும் என்றும் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.
'சிம்பு இல்லாமல் 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' நடைபெறுமா' என்ற கேள்விக்கு கவுதம் மேனன், "அந்தக் கதையே கார்த்திக் (விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவின் பெயர்) உடையதுதான். அவர் இல்லாமல் வாய்ப்பில்லை" என்று பதிலளித்துள்ளார்.