தமிழ் சினிமா

கவுதம் மேனனுக்குப் புகழாரம் சூட்டிய துல்கர் சல்மான்

செய்திப்பிரிவு

கவுதம் மேனன்தான் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் சூப்பர் ஸ்டார் என்று துல்கர் சல்மான் கூறினார்.

தேசிங்கு இயக்கத்தில் துல்கர் சல்மான், ரீத்து வர்மா, ரக்‌ஷன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்த இந்தப் படம், நாளை (பிப்ரவரி 28) திரைக்கு வரவுள்ளது. இதை முன்னிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு.

ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் கலந்துகொண்ட இந்தச் சந்திப்பில் துல்கர் சல்மான் பேசியதாவது:

''பலரும் என்னிடம் ஏன் தமிழில் இவ்வளவு பெரிய இடைவெளி என்று கேட்டார்கள். அதுவே பெரிய சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படத்தில் எங்களையும் மீறி நிறைய தாமதமாகிவிட்டது. இயக்குநர் தேசிங்கு இந்தப் படத்தின் கதையைச் சொன்னவுடனே, நான் ஒப்புக் கொள்ளவில்லை. 2 ஆண்டுகள் கழித்தே ஒப்புக்கொண்டேன். அவர் என்னைப் பற்றி அவ்வளவு பெருமையாகப் பேசினார்.

முதல் நாள் இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு டென்ஷனாகவே வருவேன். அனைவருமே ரொம்ப நட்பாகிவிட்டோம். 'பெல்லி சூப்புலு' அனைவருக்குமே பிடித்த படம். அதில் நடித்த ரீத்து வர்மா ரொம்ப திறமையானவர். இந்தப் படத்தில் அவரை அனைவரும் தமிழ்ப் பெண்ணாகவே பார்ப்பீர்கள். படத்தின் வசனத்துக்காக ஒரு முறை கூட ரீ-டேக் போனதே இல்லை. அந்த அளவுக்கு ரொம்பவே முன்முயற்சியோடு இருப்பார்.

கவுதம் மேனன் சார் நடித்துள்ள கதாபாத்திரத்தில் முதலில் யார் நடிப்பது என்பது தெரியாமல் இருந்தது. இந்தப் படத்தின் பெரிய பலம் என்றால் அது கவுதம் சார்தான். இளைஞர்கள் ஏதோ பண்ணிட்டு இருக்காங்க என்று ட்ரெய்லரைப் பார்க்கும்போது தெரியும். ஆனால், இதில் ஒரு கதை இருக்கிறது என்பதை கவுதம் சார் உணர வைப்பார்.

அவர் இந்தப் படத்தின் சூப்பர் ஸ்டார். அவருடைய கதாபாத்திரத்துக்கு நிறைய மாற்றங்கள் உள்ளன. அவரைத் திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன். படப்பிடிப்புத் தளத்தில் அவருடன் நிறையப் பேசிக் கொண்டிருந்தோம். அவருடைய மிகப்பெரிய ரசிகன் நான். கவுதம் சாருடைய படங்களில் நடிக்க ஆசை. அவரது படத்தில்தான் நான் ரொமான்டிக் ஹீரோவாகத் தெரிவேன். அதில் நிறைய த்ரில் இருக்கும்''.

இவ்வாறு துல்கர் சல்மான் பேசினார்.

SCROLL FOR NEXT