'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில்தான் இயக்குநர் கவுதம் மேனன் நடித்துள்ளார்.
தேசிங்கு இயக்கத்தில் துல்கர் சல்மான், ரீத்து வர்மா, ரக்ஷன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்த இந்தப் படம், நாளை (பிப்ரவரி 28) திரைக்கு வரவுள்ளது. இதை முன்னிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு.
ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் கலந்துகொண்ட இந்தச் சந்திப்பில் இயக்குநர் கவுதம் மேனன் பேசியதாவது:
“ஒரு நடிகராக என் பயணம் தொடங்கியுள்ளது. எதுவும் ப்ளான் செய்து நடிக்கவில்லை. என் படங்களில் அவ்வப்போது சில காட்சிகளில் மட்டும் தலைகாட்டியிருப்பேன். தேசிங்குடனான சந்திப்பு எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. 6 மாதங்களாகப் பேசி, மெசேஜ் செய்து என் அலுவலகத்தில் சந்தித்தார்.
எஸ்.ஜே.சூர்யா சாருக்காகத்தான் இந்த கேரக்டர் எழுதினேன். ஆனால், அவர் ஹீரோவாகத்தான் பண்ணுவேன் என்றார். நீங்கள் பண்ணுங்கள் என்று என்னிடம் கேட்டார். ஒரு லைன் மட்டும் சொன்னார். உடனே பண்றேன் என்று கூறிவிட்டேன். துல்கர்தான் ஹீரோ என்றார். அவர் எப்போதுமே நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிப்பவர். ஆகையால் இதுவும் நல்ல கதையாகத்தான் இருக்கும் எனத் தெரியும்.
ரொம்ப இளமையான டீம், உண்மையுடன் பணிபுரிந்தார்கள். ஏன் சொல்கிறேன் என்றால், சில படப்பிடிப்புகளில் அப்படி நடக்காது. டப்பிங்கில் என் காட்சிகளை மட்டுமே பார்த்து டப்பிங் பண்ணினேன். இப்போது எல்லாம் நிறைய கதவுகள் திறக்கும்போது, அதற்குள் எல்லாம் போய்த்தான் ஆகவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இந்தப் படத்தில் எனது பணியின் மூலம் சந்தோஷமாகி இருப்பார்கள் என நம்புகிறேன்”.
இவ்வாறு இயக்குநர் கவுதம் மேனன் பேசினார்.