'துப்பறிவாளன் 2' படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகியிருப்பதை மிஷ்கின் உறுதி செய்தார்.
’சைக்கோ’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளுக்கு இடையே, விஷால் நடிப்பில் உருவான 'துப்பறிவாளன் 2' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார் இயக்குநர் மிஷ்கின். அந்தப் படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சினையால், அதன் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார் மிஷ்கின். ஆனால், இந்த விலகல் தொடர்பாக எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில் 'சைக்கோ' படத்துக்குக் கிடைத்த வரவேற்பு தொடர்பாக இயக்குநர் மிஷ்கின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், "இதை மாபெரும் வெற்றி என்று கூறுவதை விட 'அளவில்லாத அன்பு' என்றே கூறுவேன். படத்தைப் பார்த்த மக்கள் எடுத்துச் சென்றதும், கொடுத்ததும் அதுதான். எந்த வகை ஜானராக இருக்கட்டும், எந்த வகை பின்புலத்தில் கதை சொன்னாலும், பார்க்கும் பார்வையாளன் உணர்வுபூர்வமாக உணர்ந்தால் மட்டுமே, அதனைக் கொண்டாடுவான்.
நான் இந்தப்படங்களைக் கண்மூடித்தனமான நம்பிக்கையில்தான் உருவாக்கினேன். ஆனால், இறுதியில் அளவிலா அன்பைப் பெற்றிருக்கிறேன். 'கண்மூடித்தனமான நம்பிக்கை, ஆத்மாவின் தேடல்' இரண்டும்தான் வாழ்வின் உள்ளார்ந்த அர்த்தம் என்பதை நம்புபவன் நான். உண்மை என்னவெனில் எனது 'பிசாசு' நாயகன் சித்தார்த், 'துப்பறிவாளன்' கணியன் பூங்குன்றன், 'சைக்கோ' கௌதம் அனைவரும் இந்த மந்திரத்தை நம்புபவர்களே.
ரசிகர்கள் இதனை வாழ்வின் அன்பாக எடுத்துச் செல்ல வேண்டுமென்பதே என் விருப்பம். நான் வெகு பணிவுடன் இந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் பணிபுரிந்த நடிக, நடிகையர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், விமர்சகர்கள், என் வளர்ச்சியை விரும்பும் அன்பு உள்ளங்கள், ரசிகர்கள் அனைவருக்கும் எனக்குத் தனித்துவ வெற்றி தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல் அனைவரையும் மகிழ்விக்கும் திரைப்பயணத்தைத் தொடர விரும்புகிறேன். மிக விரைவில் எனது அடுத்த பயணம் பற்றிய அறிவிப்பை வெளியிடுகிறேன்" என்று தெரிவித்துள்ளார் மிஷ்கின்.
இந்த அறிக்கையில் 'துப்பறிவாளன் 2' தொடர்பாக எந்தவொரு தகவலுடமே இடம்பெறவில்லை. மேலும், தனது அடுத்த படம் தொடர்பாக விரைவில் அறிவிக்கிறேன் என்பதன் மூலம், இனி 'துப்பறிவாளன் 2' இயக்குநர் நான் இல்லை என்பதை மறைமுகமாக தெளிவுபடுத்தியுள்ளார் மிஷ்கின். 'துப்பறிவாளன் 2' படத்தின் நிலை என்ன என்பதை, விஷால் பதிலளித்தால் மட்டுமே தெரியவரும்.