'பெல்லி சூப்புலு' தமிழ் ரீமேக்கின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படம் ‘பெல்லி சூப்புலு’. தருண் பாஸ்கர் இயக்கிய இந்தப் படத்தில், ரீத்து வர்மா நாயகியாக நடித்திருந்தார். ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், இந்தி மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு தேசிய விருதுகள், ஆந்திர அரசின் நந்தி விருது ஆகிய விருதுகளை 'பெல்லி சூப்புலு' வென்றது. இதனைத் தொடர்ந்து இந்தப் பட தமிழ் ரீமேக்கின் உரிமையை கவுதம் மேனன் கைப்பற்றி பணிகளைத் தொடங்கினார். பைனான்ஸ் சிக்கலால் இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை விற்றுவிட்டார்.
இதனைத் தொடர்ந்து 'பெல்லி சூப்புலு' படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்க, படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடித்து வந்தார். ஏ.எல்.விஜய்யிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திக் சுந்தர் இந்த ரீமேக்கை இயக்கி வந்தார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்து வருகிறார்.
ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுத் தொடங்கினார்கள். அதன்படி இன்றுடன் (பிப்ரவரி 26) ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவு பெற்றதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இன்னும் இந்தப் படத்துக்குப் பெயரிடப்படவில்லை.