தமிழ் சினிமா

வடிவேலுடன் ஒப்பிட்டு மீம்ஸ்: ராஷ்மிகா ரசிப்பு

செய்திப்பிரிவு

வடிவேலு உடன் ஒப்பிட்டு மீம்ஸ் உருவாக்கத்தை ரசித்துப் பதிலளித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.

வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதின், ராஷ்மிகா மந்தனா, ஆனந்த் நாக், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பீஷ்மா'. சித்தாரா என்டர்டையின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகியுள்ளது. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும், பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், இயக்குநர் த்ரிவிக்ரம் தொடங்கி பல திரையுலகப் பிரபலங்களும் இந்தப் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்காக அணிந்த உடையில் போட்டோ ஷூட் ஒன்றைச் செய்தார் ராஷ்மிகா மந்தனா.

இந்தப் போட்டோ ஷூட் எடுக்கப்பட்ட ஒவ்வொரு புகைப்படத்திலும் வெவ்வேறு முக மாற்றத்தில் இருந்தார் ராஷ்மிகா. இதனை வைத்து, இதே மாதிரியான வடிவேலுவின் காமெடி புகைப்படங்களையும் சேர்த்து மீம்ஸ் உருவாக்கி வெளியிட்டனர். அவர் எடுத்த அனைத்துப் புகைப்படங்களுமே ஒவ்வொரு வடிவேலு கேரக்டருடன் ஒத்துப் போனதால் இந்த மீம்ஸ்கள் பெரும் வைரலாயின.

இந்த மீம்ஸ் தொடர்பாக ராஷ்மிகா மந்தனா தனது ட்விட்டர் பதிவில், "இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. வடிவேலு சார் ரொம்ப கயூட்டாக இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழில் ராஷ்மிகாவுக்கு முதல் படமாக 'சுல்தான்' வெளியாகவுள்ளது. பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் இந்தப் படத்தில் கார்த்திக்கு நாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார்.

SCROLL FOR NEXT