'மாஃபியா' படத்தின் விமர்சனம் தொடர்பாகவும், 2- ம் பாகம் தொடர்பாகவும் கார்த்திக் நரேன் தனது ட்விட்டர் பதிவில் பதிலளித்துள்ளார்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மாஃபியா'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வசூல் ரீதியாக அதன் பொருட்செலவுக்கு ஏற்ற அளவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. விமர்சகர்கள் சிலர் இந்தப் படத்தைப் பாராட்டினாலும், சிலர் கடுமையாக விமர்சித்திருந்தார்கள்.
'மாஃபியா' விமர்சனங்கள் தொடர்பாக கார்த்திக் நரேன் கூறுகையில், "மாஃபியா படத்தை வரவேற்ற பத்திரிகை, ஊடகம் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. எல்லா விமர்சனங்களையும் படித்துக் கொண்டிருக்கிறேன். சில ஆக்கபூர்வமான விமர்சனங்களையும், சில கடுமையான விமர்சனங்களையும் பார்த்தேன். எல்லாவற்றையும் நேர்மறையாக எடுத்துக்கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், 'மாஃபியா' படத்தின் க்ளைமாக்ஸ் அதன் 2-ம் பாகம் வருவது போன்று அமைத்திருந்தார். படத்தின் தலைப்பு கூட 'மாஃபியா: அத்தியாயம் 1' என்றுதான் வைத்திருந்தார். படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டிகளில் கூட ”முதல் பாகத்தின் வெற்றியைப் பொறுத்தே 2-ம் பாகம் உருவாகும்” எனக் குறிப்பிட்டு இருந்தார்.
தற்போது வசூல் ரீதியாகப் படத்துக்குக் கிடைத்த ஆதரவை வைத்து கார்த்திக் நரேன் தனது விட்டர் பதிவில், "கற்றதை மறந்து விட்டு மீண்டும் கற்கிறேன். ஒவ்வொரு கைதட்டலும் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்று. ஆம், நாங்களும், டெக்ஸ்டரும் இன்னும் நிறைய ஆச்சரியங்களுடன் மீண்டும் வருவோம்" என்று தெரிவித்துள்ளார் கார்த்திக் நரேன்.
தனுஷின் அடுத்த தமிழ்ப் படத்தை கார்த்திக் நரேன் இயக்கவுள்ளார். ஆகையால், இதனைத் தொடர்ந்து 'மாஃபியா: அத்தியாயம் 2' உருவாகும் எனத் தெரிகிறது.