'தலைவி' படக்குழுவினரால் வெளியிடப்பட்ட கங்கணாவின் லுக்கிற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாள் இன்று (பிப்ரவரி 24) வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு 'தலைவி' என்ற படம் தயாராகிறது. ஏ.எல்.விஜய் இயக்கி வரும் இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் இணையத்தில் பெரும் கிண்டலுக்கு ஆளானது. இதனிடையே, தற்போது ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு கங்கணா ரணாவத்தின் இளமையான லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால், படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் தயாராகும் இந்தப் படத்தின் திரைக்கதையை இயக்குநர் ராஜமெளலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் எழுதியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ள இந்தப் படத்துக்கு ஹாலிவுட் ஒளிப்பதிவாளரான விஷால் விட்டல் ஒளிப்பதிவு செய்து வருகிறார். விஷ்ணு இந்தூரி மற்றும் சைலேஷ் ஆர் சிங் இணைந்து தயாரித்து வருகிறார்கள்
இந்தப் படத்தில் எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி, சசிகலாவாக ப்ரியாமணி ஆகியோர் நடித்து வருகிறார்கள். ஜூன் 26-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.