தமிழ் சினிமா

சூர்யா - ஜோதிகாவின் பாராட்டு, பரிசு: 'சில்லுக் கருப்பட்டி' இயக்குநர் நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

சூர்யா - ஜோதிகா இருவருமே தனது படக்குழுவினரைப் பாராட்டி, பரிசளித்ததை, 'சில்லுக் கருப்பட்டி' இயக்குநர் ஹலிதா ஷமீம் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சுனைனா, லீலா சாம்சன், சாரா அர்ஜுன், ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சில்லுக் கருப்பட்டி'. சூர்யாவின் 2டி நிறுவனம் இந்தப் படத்தின் உரிமையைக் கைப்பற்றி, சக்தி பிலிம் பேக்டரி வழியே வெளியிட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இயக்குநர் ஹலிதா ஷமீமை பல்வேறு முன்னணி இயக்குநர்களும் பாராட்டியுள்ளனர். மேலும், இந்தப் படத்துக்கு வரவேற்பு கிடைத்தவுடனே, படக்குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்தார் சூர்யா.

தற்போது 'சில்லுக் கருப்பட்டி' வெளியாகி 50 நாட்கள் ஆனதையொட்டி, படக்குழுவினரை அழைத்து சூர்யா - ஜோதிகா இருவரும் கவுரவித்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக ஹலிதா ஷமீம் கூறுகையில், "சூர்யாவும் ஜோதிகாவும் எங்கள் குழுவை அவர்கள் வீட்டுக்கு அழைத்தார்கள். எல்லா தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்களையும் பாராட்டினார்கள். படத்தைப் பற்றிய அவர்கள் பாராட்டுகளால் நான் வாயடைத்துப் போனேன்.

அவர்களின் கைகளைப் பற்றி என் நன்றியைச் சொன்னேன். ஒரு மேக்புக் கணினியையும் எனக்கு அன்புப் பரிசாகத் தந்தார்கள். இதுதான் சூர்யா சார் வீடு, இது தான் சூர்யா சாரோட கார் என்று என்னிடம் பலர் சொல்லிக் கேட்டதுண்டு. சூர்யா சாரே “இது தான் என் வீடு, இந்த ரூம் ஜோ டிசைன் பண்ணது, இந்த இடம் அவ்வளவு நினைவுகளைத் தாங்கிக்கிட்டு இருக்கு” என்றெல்லாம் என்னிடம் சொன்னது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

என் சிலேட்டை வாங்கி சூப்பர் என்று போட்டது மட்டுமில்லாமல் எனக்கு இன்னுமொரு சிலேட்டையும் (மேக்புக் கணிணி) வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். பாக்ஸை இன்னும் பிரிக்கவில்லை. பிரித்தால் அவர்களுக்கான ஒரு கதை எழுதாமல் இருக்கப் போவதுமில்லை” என்று தெரிவித்துள்ளார் ஹலிதா ஷமீம்.

SCROLL FOR NEXT