தமிழ் சினிமா

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் வெற்றியாளராக வனிதா தேர்வு

செய்திப்பிரிவு

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் வெற்றியாளராக வனிதா விஜயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், நீயா நானா, பிக் பாஸ் ஆகிய நிகழ்ச்சிகள் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலம். அந்த வரிசையில் இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் இணைந்துள்ளது. தொலைக்காட்சியில் காமெடி செய்பவர்கள் பிரபலங்களுடன் இணைந்து ஒரு அணியாகப் பங்கேற்றுச் சமைப்பதே இந்த நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் சமைப்பது மட்டுமன்றி காமெடியும் மக்கள் மத்தியில் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நேற்று (பிப்ரவரி 23) ஒளிபரப்பானது. இறுதிப் போட்டியில் உமா ரியாஸ், வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன் மற்றும் ரேகா ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் வனிதா விஜயகுமார் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு 2 லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. 2-ம் இடத்தைப் பிடித்தார் உமா ரியாஸ். அவருக்கு 1 லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. 3-ம் இடத்தை ரம்யா பாண்டியனும், 4-ம் இடத்தை ரேகாவும் பிடித்தார்கள்.

முதல் பரிசை வென்றுவிட்டு வனிதா விஜயகுமார் பேசும்போது, "என் குழந்தைகளுக்குப் பிறகு எனக்கு ரொம்பப் பிடித்த விஷயம் சமையல்தான். இந்த இரண்டு விஷயங்களால் மட்டுமே என் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. நான் படித்த சமையல் கலைக்கு நியாயம் செய்ய வேண்டும் என்றுதான் இந்நிகழ்ச்சிக்கு வந்தேன். கண்டிப்பாக அனைவரையும் தாண்டி முதலிடத்துக்கு வர வேண்டும் என நினைக்கவில்லை" என்று கண் கலங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதால், விரைவில் இதிலும் சீஸன் 2 தொடங்குவார்கள் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT