சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதை கடந்த ஆண்டு பெற்றிருக்கும் படம்.
60 வயது கருப்பசாமி மனைவியை இழந்தவர். மகன், மருமகள், பேத்தி ஆகியோர் கிராமத்தில் வசிக்க, இவரோ தங்கையின் வீட்டில் வசிக் கிறார். சென்னையில் இரவுக் காவ லாளியாக பணியாற்றும் இவர், ஒருநாள் பணி முடிந்து வீடு திரும்பும் வழியில் சாலை விபத்தில் சிக்கி, இடுப்பை உடைத்துக்கொள்கிறார். இவரது மருமகன்களான வீரா, மணி, முருகன் மூவரும் நகரத்தில் உள்ள எலும்பு மருத்துவமனையில் அவரை சேர்த்து தரமான சிகிச்சை அளிக்க விரும்புகின்றனர். ஆனால் அவரது மகன் செந்தில், நாட்டு வைத்தியம் செய்வதாக கூறி, அப்பாவை வலுக்கட்டாயமாக கிராமத்துக்கு அழைத்துச் செல்கி றார். ஒருசில நாட்களில் கருப்பசாமி இறந்துபோகிறார். இதை நம்ப முடியாத மருமகன் வீரா, அவரது மரணத்தில் ஒளிந்திருக்கும் மர்மத்தை கண்டுபிடிப்பதுதான் கதை.
சமூக ஒப்புதலுடன் செய்யப்படும் முதியோர் கருணைக் கொலையை கதைக் கருவாக வைத்து எடுக்கப் பட்டிருக்கும் ‘டாக்கு டிராமா’ வகை திரைப்படம். உலகின் பல நாடுகளில், குறிப்பாக கிராமங்களில், படுத்த படுக்கையாக பலமாதங்கள் நோயுடன் போராடிவரும் முதியோரை கருணைக் கொலை செய்யும் வழக்கம் இன்றளவும் நீடிக்கிறது. தமிழகத்தின் சில பகுதிகளிலும் ‘தலைக் கூத்தல்’ என்ற பெயரில் இந்த சமூகக் கொடுமை நடைமுறையில் இருக்கி றது. கதாபாத்திரங்கள் வாழும் ஊரை குறிப்பிட்டுச் சொல்லாமல் சர்ச்சை யைத் தவிர்த்து, பிரச்சினையை மட்டும் பேச முயன்றிருக்கிறார் இப்படத்தை எழுதி, இயக்கி, படத் தொகுப்பையும் செய்திருக்கும் பிரியா கிருஷ்ணசாமி.
கருப்பசாமி, அவரது தங்கை, மருமகன் வீரா, மகன் செந்தில் ஆகிய 4 முதன்மைக் கதாபாத்திரங்களும் திரைக்கதையை வலுவாக தாங்கிப் பிடிக்கின்றன. இந்த நான்கில் ‘தலைக்கூத்தல்’ என்பதன் வேர்களைத் தேடிச்சென்று வெளிப்படுத்தும் வீரா கதாபாத்திரம், ஒரு சமூக செயற் பாட்டாளராகவும், மாமாவிடம் அதிக பாசம் கொண்டவராகவும் சித்தரிக்கப் பட்டிருக்கிறது. அப்படியிருக்க, இடுப்பு எலும்பு ஒடிந்து நகரமுடியாமல் படுத்த படுக்கையாக இருக்கும் மாமாவை விட்டுவிட்டு, வீரா தனது தொழிற்சங்க வேலைகளைப் பார்க்கச் செல்வதாகக் காட்டி, அந்த கதாபாத்திரப் பரிமாணத்தை (character arc) இயல்பின் போக்கில் இருந்து தன் இஷ்டத்துக்கு வளைத் திருக்கிறார் இயக்குநர்.
இந்த கதாபாத்திரச் சிக்கலை மறந்துவிட்டு, அடுத்தடுத்த காட்சி களுக்கு நகரலாம் என்றாலும், எத்தனை வகையான தலைக்கூத்தல் முறைகள் இருக்கிறது என்பதை எண்ணிக்கையில் கூறும் இயக்குநர், அது இப்போது விஷ ஊசியாக மாறியிருக்கிறது என்ற கற்பனையை, செயற்கையான முறையில் ஜன்னிக் காய்ச்சல் வரச்செய்து முதியவர் களைக் கொல்லும் ‘தலைக்கூத்தல்’ என்ற உண்மையுடன் இணைத்து விடுகிறார். இதனால், முற்றாக தவிர்க் கப்பட வேண்டிய ஒரு சமூக இழிவை, துவேஷமான பார்வையுடன் அணுகும் படமாக ‘பாரம்’ மாறிவிடுகிறது. அதேபோல, எதிர்மறை கதாபாத்திரங் களுக்கு சிறுபான்மை மதத்தினரின் பெயர்களை சூட்டும் மலிவான உத்தியை இதுபோன்ற ஒரு நல்ல முயற்சியில் தவிர்த்திருக்கலாம்.
இருப்பினும், இரண்டு அம்சங் களுக்காக இப்படத்தை கட்டாயம் பாராட்டலாம். முதலாவது, கருணைக் கொலையின் வேர்களைத் தேடிச் செல்லும் வீராவுக்கு கிடைக்கும் பதில்கள். அவற்றில் கிராமிய வாழ் வின் இயலாமை, மரபு, பாரம்பரியம் என்ற பெயரால் தொடரும் சமூகக் குற்றம், இவற்றைச் செரிமானம் செய்துகொள்ளும் ஓட்டு அரசியல் ஆகிய பின்னணிகள் வெளிப்பட்டு பார்வையாளர்களை கோபம்கொள்ள வைக்கிறது.
இரண்டாவது அம்சம், ‘புதுச்சேரி பல்கலைக்கழகத்தின்’ நாடகத் துறை தலைவர் ராஜு (கருப்பசாமியாக நடித்திருப்பவர்) தலைமையில் அத்துறையில் பயிற்சி பெற்ற கலை ஞர்கள் மட்டுமே இப்படத்தில் அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்திருப்பது. அனைவருமே அவ்வளவு இயல்பான நடிப்பை தந்துள்ளனர்.
உலகெங்கும் முதியவர்களின் வாழ்வாதாரம் பெரும் பிரச் சினையாக எதிர்கொள்ளப்படும் கால கட்டத்தில் வெளிவந்திருக்கும் இப்படத்தின் குறைகளை மன்னித்து கொண்டாடலாம்!