ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள 'ஜிப்ஸி' படம் மார்ச் 6-ம் தேதி வெளியாகிறது.
‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களைத் தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜிப்ஸி’. ஜீவா நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் நடாஷா சிங் நாயகியாக நடித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. ஆனால், தணிக்கையில் பல்வேறு காட்சிகள் நீக்கப்பட்டன. இறுதியாக TRIBUNAL-லிலும் தணிக்கை மறுக்கப்பட்டது. இறுதியில் தணிக்கைக்குத் தகுந்தாற் போல் சில காட்சிகளை நீக்கி, தணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். அப்போது 'ஏ' சான்றிதழ் வழங்கியது தணிக்கைக் குழு.
'ஜிப்ஸி' தணிக்கை செய்யப்பட்டாலும், படம் வெளியீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை தொடங்கியது. ஜனவரி 24-ம் தேதி 'ஜிப்ஸி' வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போதும் சில காரணங்களால் பட வெளியீடு தள்ளிப்போனது. இந்நிலையில் 'ஜிப்ஸி' மார்ச் 6-ம் தேதி வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.