தமிழ் சினிமா

'பாரம்' படத்துக்காக போஸ்டர் ஒட்டும் மிஷ்கின்

செய்திப்பிரிவு

'பாரம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதைப் போலவே, போஸ்டர் ஒட்டினார் இயக்குநர் மிஷ்கின்.

ப்ரியா கிருஷ்ணாசுவாமி இயக்கத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்து வெளியாகவுள்ள படம் 'பாரம்'. இது 66-வது தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதினை வென்றது. நேற்று (பிப்ரவரி 21) வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

வெற்றிமாறன் வெளியிட்டுள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் பிப்ரவரி 12-ம் தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக மிஷ்கின், ராம், வெற்றிமாறன் ஆகியோர் படக்குழுவினருடன் கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மிஷ்கின் பேசும் போது, 'பாரம்' படத்தைக் கொண்டாடினார். தான் இயக்கிய 'சைக்கோ' எல்லாம் ஒரு படமா, 'பாரம்' தான் படம் என்று குறிப்பிட்டார். தன் பேச்சின் இறுதியில் இந்தப் படத்துக்குப் போஸ்டர் அடிக்க பணமில்லை என்றார்கள். ஆகையால், தனது சொந்த செலவில் போஸ்டர் அடித்து தானே ஒட்டவுள்ளதாக தெரிவித்தார். பலருமே பேச்சுக்காக சொல்கிறார் என்று நினைத்தார்கள்.

ஆனால், தான் பேசியதைப் போலவே போஸ்டர் அடித்து சென்னையில் ஒட்டினார் இயக்குநர் மிஷ்கின். இந்தச் செயலால் 'பாரம்' படக்குழுவினர் நெகிழ்ச்சியுடன் மிஷ்கினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT