'ஓடி ஓடி உழைக்கணும்' படத்தின் தயாரிப்பாளருக்கு சந்தானம் உதவி உள்ளதாக தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.
மணிகண்டன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'ஓடி ஓடி உழைக்கணும்'. இந்தப் படத்தை தயாரித்து வரும் வாசன் விஷுவல்ஸ் நிறுவனத்துக்கு பணப் பிரச்சினை ஏற்பட்டதால், படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் அமைரா, யோகி பாபு உள்ளிட்ட பலர் சந்தானத்துடன் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவருக்கு கடுமையான உடல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் படத்தைத் தொடர்ச்சியாக பண்ண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 'டகால்டி' மற்றும் 'சர்வர் சுந்தரம்' படத்தின் வெளியீட்டுப் பிரச்சினைக்காக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சந்தானத்துக்கு வேண்டுகோள் வைத்தார் தயாரிப்பாளர் கே.ராஜன்.
'ஓடி ஓடி உழைக்கணும்' படத்தில் சந்தானம் பணம் வாங்காமல் முடித்துக் கொடுக்க வேண்டும் என்றும், படம் வெளியாகும்போது கண்டிப்பாக வியாபாரமாகி சந்தானத்துக்குப் பணம் கொடுத்துவிடுவார்கள் என்றும் தன் பேச்சில் குறிப்பிட்டார் கே.ராஜன்.
தற்போது அந்த வேண்டுகோளை சந்தானம் ஏற்றுக் கொண்டாதாக கே.ராஜன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக 'பரம்பதம் விளையாட்டு' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கே.ராஜன் பேசும் போது "சந்தானத்துக்கு ஒரு வேண்டுகோள் வைத்தேன். உடனடியாக சந்தானம் இனிமேல் பணம் வாங்காமல் படத்தை நடித்து முடிக்கிறேன். நீங்கள் ஷுட்டிங்கிற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார். அதற்கு சந்தானத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். " என்று தெரிவித்துள்ளார் கே.ராஜன்.