தமிழ் சினிமா

'தர்பார்' படக்குழுவினரை கடுமையாகச் சாடிய கே.ராஜன்

செய்திப்பிரிவு

'தர்பார்' படக்குழுவினரை கடுமையாகச் சாடி, 'பூதமங்கலம் போஸ்ட்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசினார் தயாரிப்பாளர் கே.ராஜன்,

எம்.பி.ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பூதமங்கலம் போஸ்ட்'. முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (பிப்ரவரி 23) சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது:

’பூதமங்கலம் போஸ்ட்’ என்ற படத்தை அற்புதமாக எடுத்துவிட்டீர்கள். உங்களுக்கு என்ன வழி காட்டுவது என்று தெரியவில்லை. ஆனால், இங்கு சில பைத்தியக்காரர்கள் இந்த நடிகரின் படத்துக்குத் தான் 1000 ரூபாய், 300 ரூபாய் டிக்கெட் வாங்கிப் போவேன் என்று நினைக்கிறார்கள். அப்பா, அம்மா ஜூரமாக படுத்திருந்தால் மாத்திரை வாங்கிக் கொடுக்க மாட்டான். தந்தை - தாய் தான் முதல் தெய்வம்.

மக்கள் பார்ப்பதற்கு விரசமில்லாமல் படமெடுங்கள். நமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் உலகிலும் உயர்ந்தது. சில நாட்களுக்கு முன்பு அரியலூரில் பெண்கள் பீர் அருந்தியுள்ளனர் என்ற செய்தியைப் படித்தேன். இந்த அரசாங்கத்தின் காலில் விழுந்து கேட்கிறேன். 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய்க்காக மக்களை அழிக்காதீர்கள். தாலிக்கு தங்கம் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு, குடியைக் கொடுத்து தாலியை அறுக்காதீர்கள். இது என் வேண்டுகோள். வருவாய்க்கு வேறு எத்தனையோ வழிகள் இருக்கிறது.

நம்ம ஆட்கள் 2 கோடி, 3 கோடி ரூபாய் போட்டு படம் எடுத்து முடித்துவிடுகிறார்கள். பின்பு வெளியிட முடியாமல் எங்களிடம் வழிக் கேட்கிறார்கள். எங்களிடமும் வழியில்லை. எந்த விநியோகஸ்தரும் சின்ன படங்கள் வாங்குவதில்லை. நம்ம வாங்கி வெளியிட்டாலும், திரையரங்குகள் தருவதில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 மினி தியேட்டர்கள் கட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். 30 ரூபாய், 40 ரூபாய், 50 ரூபாய் டிக்கெட்டில் சின்ன படங்களை அதில் திரையிட்டு போட்ட முதலீட்டை எடுக்கலாம்.

பெரிய நடிகர்கள், இயக்குநர்களைக் கேட்கிறேன். 100 கோடி, 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறீர்களே, அதை எந்தப் படத்தில் முதலீடு பண்ணுகிறீர்கள்? 35 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஏ.ஆர்.முருகதாஸிடம் கேட்குகிறேன். நீங்கள் எந்தப் படத்தில் முதலீடு பண்ணுகிறீர்கள்? எங்களுடைய தமிழ்நாட்டு பணம் எங்குச் செல்கிறது. தயாரிப்பாளர் கைக்கு வரும் பணம் மீண்டும் இந்த தமிழ் திரையுலகிற்கே வருகிறது.

‘தர்பார்’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது. இந்தப் படத்தின் ஷுட்டிங் முழுக்க மும்பையில் நடந்தது. அங்கு படப்பிடிப்பு நடந்தால், இங்குள்ள தொழிலாளர்களுக்கு யார் வேலை கொடுப்பது?. அந்தப் படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ், யோகி பாபு தவிர்த்து மீதம் நடித்த அனைவருமே வடஇந்தியர்கள் தான்.

ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ் ஆகியோர் பக்கத்து மாநிலங்களாக இருந்தாலும் தமிழர்களாக ஏற்றுக் கொண்டுவிட்டோம். தமிழ் படங்களில் 75% படப்பிடிப்பை இங்கு நடத்தினால் என்ன? 25% வேறு எங்கு வேண்டுமானாலும் எடுங்கள். ஆந்திராவில் திரைத்துறை செழிப்பாக இருக்கிறது. ஒரு படம் நஷ்டமானால் விநியோகஸ்தர்களை அழைத்து பணத்தை பிரித்துக் கொடுக்கிறார்கள். இங்கு நஷ்டமாகிவிட்டு என்று இயக்குநர் வீட்டுக்குப் போனால் காவல்துறையில் புகார் அளிக்கிறார்கள். முழுக்க மும்பையில் எடுக்கப்பட்ட படத்தை தமிழ் ரசிகன் 300 ரூபாய் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிப் பார்க்கிறான்.

இவ்வாறு தயாரிப்பாளர் கே.ராஜன் பேசினார்.

SCROLL FOR NEXT