தமிழ் சினிமா

ரஜினி, விஜய் வரும்போது உங்களுக்கு என்ன பிரச்சினை? - சுரேஷ் காமாட்சி காட்டம்

செய்திப்பிரிவு

ரஜினி, விஜய் வரும்போது உங்களுக்கு என்ன பிரச்சினை என்று விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்கு வராத நடிகர்களைச் சாடினார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

24 ஹவர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'பரமபதம் விளையாட்டு'. திருஞானம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் த்ரிஷா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிப்ரவரி 28-ம் தேதி வெளியாகியுள்ள இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் இன்று (பிப்ரவரி 22) நடைபெற்றது.

இதில் படத்தின் இயக்குநர் திருஞானம், இசையமைப்பாளர் மானஸி, விஜய் வர்மா ஆகியோருடன் தயாரிப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். துபாயில் படப்பிடிப்பில் இருப்பதால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இதனால், 'பரமபதம் விளையாட்டு' விழாவில் பேசிய பலருமே த்ரிஷாவைத் தாக்கிப் பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது:

"15 நாட்களுக்கு முன்பு இந்தப் படத்தின் ஸ்பெஷல் ஷோவுக்கு அழைத்தார்கள். 20 படங்கள் இயக்கிய இயக்குநர் மாதிரி இந்தப் படத்தை இயக்குநர் திருஞானம் இயக்கியிருந்தார். அந்த அனுபவம் தெரிந்தது. திருஞானத்திடம் 5 ஆண்டுகளாகப் பேசி வருகிறேன். அவர் இப்படி இயக்குவார் என எதிர்பார்க்கவில்லை. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. த்ரிஷாவுக்கு இதுவொரு முக்கியமான படமாக இருக்கும்.

புதுமுகம் விஜய் வர்மா தமிழ் சினிமாவுக்குப் புதுவரவு. அவருக்குச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. சிறுமி மானஸ்வி நன்றாக நடித்திருக்கிறார். அவர் நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியின் மகள் என்று பிறகுதான் தெரிந்தது. அம்ரீஷின் இசை சிறப்பாக இருக்கிறது.

இசை வெளியீட்டு விழா என்றால் படத்தில் நடித்தவர்கள்தான் வருவார்கள். ஆனால், இங்கு தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நண்பர்களாக வந்து உட்கார்ந்திருக்கிறோம். படத்தின் விளம்பரத்துக்கு வரவில்லை என்றால் அவர் பெரிய நடிகர் என்பது ட்ரெண்டாகி விட்டது. ரஜினி சார், விஜய் சார் ஆகியோர் எல்லாம் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்கு வரும்போது, இவர்கள் எல்லாம் ஏன் வருவதில்லை என்று தெரியவில்லை.

அவர்களை இந்த இடத்துக்குக் கொண்டு போய் விட்டதே ரசிகர்களும், பத்திரிகையாளர்களும் தான். அவர்கள் படத்தின் விளம்பரப்படுத்தும் சந்திப்பில் கலந்து கொள்வதில் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. கோடிகளில் போட்டு உங்களை ஏன் வைத்துப் படமெடுக்கிறோம் என்றால், முன்னணியாக இருப்பதால் மட்டுமே. உங்களுக்கென்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் என்பதுதான் காரணம்.

முகம் தெரிந்த நடிகர்கள் இருந்தால்தான் படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். குறைந்தபட்சம் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்குப் போக வேண்டுமே என்ற பொறுப்பு வேண்டாமா? ஏன் யாரையுமே சந்திக்காமல் இருக்கிறீர்கள். உங்களுக்கு என்னதான் பிரச்சினை? நீங்கள் விளம்பரப்படுத்த வரவில்லை என்றால் புதுமுக நடிகர்களை வைத்துப் படமெடுத்துவிடுவோமே. உங்களுக்குச் சம்பளம் கொடுத்துப் படமெடுத்தால், நீங்கள் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்கு வருவீர்கள், ஒரு பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதுதான் காரணம்”.

இவ்வாறு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசினார்.

SCROLL FOR NEXT