தமிழ் சினிமா

இணையத்தில் வைரலாகும் அஜித்தின் லுக்: ரசிகர்கள் கொண்டாட்டம்

செய்திப்பிரிவு

திருமண நிகழ்வு ஒன்றில் அஜித் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வலிமை'. ஜீ ஸ்டுடியோஸ் வழங்க, போனி கபூர் தயாரித்து வருகிறார். இதைத் தாண்டி இந்தப் படத்தில் அஜித்துடன் நடிப்பவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தொடர்பாக எந்தவொரு அறிவிப்புமே வெளியாகாமல் இருக்கிறது.

டெல்லியில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொள்ள அஜித் செல்லும்போது, சென்னை விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பெரும் வைரலாயின. 'வலிமை' அப்டேட்டும் இல்லை, அஜித்தின் புகைப்படங்களும் இல்லை என அவரது ரசிகர்களும் பெரும் எரிச்சல் அடைந்தனர்.

தான் தயாரித்து வரும் இந்திப் படங்கள் தொடர்பாக போனி கபூர் ட்வீட் செய்யும் போதெல்லாம், அந்த ட்வீட்டுக்கு பதிலாக, 'வலிமை' அப்டேட்' என்று பதிவிட்டு வந்தார்கள். இதனிடையே இன்று (பிப்ரவரி 21) காலை முதலே அஜித்தின் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி ட்ரெண்டாகி வருகின்றன.

சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவின் அக்கா மகள் திருமணம் நடைபெற்றது. இதில் அஜித் கலந்துகொண்டார். அப்போது மணமகன் வீட்டாரான துளசி சில்க்ஸ் குடும்பத்தினரை அஜித் வாசலில் நின்று வரவேற்றார். அப்படி வரவேற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களைத்தான் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

கோட் - ஷூட் போட்டு அஜித் ஸ்டைலாக இருந்ததால், ரசிகர்களோ இதுதான் 'வலிமை' லுக் என்று உற்சாகமாகி இருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT