ஈவிபி ஸ்டுடியோவில் எந்தவித முன்னேற்பாடுமே இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் 'இந்தியன் 2' படப்பிடிப்பில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. பிப்.19-ம் தேதி இரவு நடந்த விபத்தில் கிருஷ்ணா, மதுசூதனராவ், சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்திலிருந்து நூலிழையில் படக்குழுவினர் பலரும் உயிர் தப்பினர்.
இந்த விபத்து தொடர்பாக பெப்சி அமைப்பினர் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று (பிப்ரவரி 21) காலை நடைபெற்றது. முன்னதாக 'இந்தியன் 2' படப்பிடிப்பு விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது:
"ஆங்கிலப் படங்களுக்கு இணையாகப் படம் தயாரிக்கும்போது, அதற்கு நிகரான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது எங்களுடைய முக்கியமான கோரிக்கை.
தற்போதுள்ள சூழலில் திரைத்துறைக்குச் சம்பந்தமில்லாத உபகரணங்களை உபயோகிக்கிறார்கள். முன்பெல்லாம் 20 அடி, 40 அடி கிரேன்களை உபயோகப்படுத்தினார்கள். இவை எல்லாம் திரைப்படத் துறையால் உருவாக்கப்பட்ட உபகரணங்கள். அதை எப்படியெல்லாம் உபயோகப்படுத்தப்படுத்த வேண்டும் என்று தொழிலாளர்களுக்குத் தெரியும்.
ஆனால், இப்போது 60 அடி, 100 அடி, 200 அடியிலிருந்து படமாக்க விரும்புகிறார்கள். அதற்குச் சரியான உபகரணங்கள் திரைத்துறையில் இல்லை. ஆகையால், தொழில்துறையிலிருந்து கிரேன்கள் உபயோகிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதை உபயோகிக்கும் அறிவு இங்குள்ள சினிமா கலைஞர்களுக்கு இல்லை. சினிமாவுக்கு எப்படி இந்த கிரேன்கள் பயன்படும் என்ற அறிவு கிரேன் ஆப்ரேட்டர்களுக்கு இல்லை. உறுப்பினர் அல்லாதவர்களும், உறுப்பினர்களும் சேர்ந்து பணிபுரியும்போது, எந்த உயரத்தில் இருக்க வேண்டும், எப்படித் திருப்ப வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. அதனால்தான் இந்த மாதிரியான விபத்து ஏற்பட்டுள்ளது.
திரைத்துறை சாராத உபகரணங்கள் உபயோகிக்கும் நேரங்களில், அதைப் பயன்படுத்தும் தொழிலாளர்களுக்கும், திரைத்துறை தொழிலாளர்களுக்கும் புரிதல் ஏற்பட்ட பின்னர், அனுமதி பெற்ற பின்னரே படப்பிடிப்புக்குச் செல்வது என்ற தீர்மானத்தை எடுத்துள்ளோம். இது நடந்த விபத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடம்.
முன்பு, ஃபிலிம் ஸ்டுடியோ நடத்தியவர்கள் தயாரிப்பாளர்கள். இவர்களுக்குத் தொழிலாளர்கள் மீது அன்பும், மரியாதையும் இருந்தது. இவர்கள் காலத்துக்குப் பிறகு இப்போதுள்ள ஸ்டுடியோக்களுக்குத் தொழிலாளர்கள் மீது எந்தவிதப் பொறுப்பு, கருணை என எதுவுமே இல்லை.
ஈவிபி ஸ்டுடியோவில் 'காலா’ படப்பிடிப்பில் ஒரு விபத்து ஏற்பட்டது. அதற்குப் பிறகு 'பிகில்' படப்பிடிப்பில் கிரேன் விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இப்போது 'இந்தியன்-2’ விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். அதேபோல் அந்த ஸ்டுடியோவிலிருந்து வெளியே வரும்போது நடந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். ஒருவர் அபயகரமான நிலையில் உள்ளார்.
ஈவிபி ஸ்டுடியோ ஆட்களுக்கு எந்தவிதக் கவலையுமே இல்லை. வண்டி வெளியே வருவது, உள்ளே செல்வதைப் பார்க்கக் கூட ஆளில்லை. மேலும், இறந்த உடலை ஏற்றுவதற்குக் கூட அங்கு ஆம்புலன்ஸ் இல்லை. ஒரு முதலுதவி பண்ணக் கூட இடமில்லை.
இனிமேல் ஸ்டுடியோக்களில் பாதுகாப்பு உபகரணங்கள் எல்லாம் இருக்கிறது என்று தெரிந்தபின்னர், சம்மேளனத்துடன் ஒப்பந்தம் செய்து தொழில் பண்ண முடிவு செய்துள்ளோம். அது இல்லாமல் தொழில் பண்ண மாட்டோம்”.
இவ்வாறு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசியுள்ளார்.