'மரிஜுவானா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், வருமான வரித்துறையைக் கலாய்த்துப் பேசினார் இயக்குநர் கே.பாக்யராஜ்.
எம்.டி.விஜய் தயாரிப்பில், எம்.டி.ஆனந்த் இயக்கியுள்ள படம் 'மரிஜுவானா'. 'அட்டு' படத்தில் நாயகனாக நடித்த ரிஷி ரித்விக் நடித்துள்ள இந்தப் படத்தில் ஆஷா நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையிலுள்ள காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது.
இதில் படக்குழுவினருடன் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர்கள் கே.பாக்யராஜ், மிஷ்கின், தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கே.பாக்யராஜ் பேசியதாவது:
'' 'மரிஜுவானா' பெயருக்கு அர்த்தம் கேட்டபோது 'கஞ்சா' என்றார்கள். 45 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்களுடன் கஞ்சா அடித்துக்கொண்டே கேரம் போர்டு ஆடியிருக்கிறேன். இன்னும் அந்த நினைவுகள் எல்லாம் பசுமையாக மனதில் இருக்கிறது. அந்தக் காலத்தில்தான் இப்படியே இருந்தால் எப்படிச் சாதிக்க முடியும் என்று சிந்தித்து, கஞ்சாவைத் தூக்கிப் போட்டுவிட்டு சென்னைக்கு வந்தேன். கஞ்சாவைக் கதையின் கருவாக வைத்துப் படம் எடுத்திருக்கிறார்கள்.
கே.ராஜன் சார் இங்கு வருமான வரியைப் பற்றிப் பேசினார். வருமான வரி என்றவுடன் 'தாவணிக் கனவுகள்' படம்தான் ஞாபகம் வரும். அந்தப் படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரமாகிவிட்டது என்று செய்தி வெளியானது. அதை வைத்து, படம் வெளியான நாளில் என் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினார்கள். அப்போது என் அறையில் குளித்துவிட்டு வெளியே வரும்போது, பெண் அதிகாரி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
யாரிடமும் பேசக் கூடாது, போய் உடையை மாற்றிக் கொண்டு வாருங்கள் என்றார்கள். அப்போது இன்று படம் வெளியாகிறது. இப்போது நான் போகவில்லை என்றால் தணிக்கைச் சான்றிதழ் வாங்க முடியாது. லேப்புக்குப் போய் சான்றிதழ் கொடுக்கவில்லை என்றால், பிரிண்ட் வெளியே போகாது என்றேன். நீண்ட நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒரு அதிகாரி நீங்கள் எங்கு சென்றாலும் நானும் கூட வருவேன் என்றார்.
நான் யார் என்பதை யாரிடமும் நீங்கள் சொல்லக் கூடாது என்று சொன்னார். உடனே தணிக்கை அலுவலகத்துக்குச் சென்றேன். வருமான வரித்துறை அதிகாரியும் என்னுடன் வந்தார். அங்கிருப்பவர் கேட்ட போது, இவர் யாரென்று தெரியாது எனக் கூறிவிட்டேன். அதிகாரியைப் பயங்கரமாகத் திட்டியவுடன் உண்மையைச் சொல்ல வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. அப்போதுதான் அந்த அதிகாரியிடம் "எங்களுக்குப் பணம் எல்லாம் வரும்போது, ஒழுங்காக வரி கட்டுகிறோம். எங்களுக்கும் மார்க்கெட் போகும். அப்போது நஷ்டஈடு கொடுப்பீர்களா" என்று கேட்டேன்.
அதற்குப் பதிலே இல்லை. நம்மிடமிருந்து வாங்கிக் கொள்வார்களே தவிர திரும்ப வருமா என்பதற்கு உத்தரவாதமில்லை”.
இவ்வாறு இயக்குநர் கே.பாக்யராஜ் பேசினார்.
தவறவிடாதீர்!