அர்ஜுன் (அசோக் செல்வன்), அனு (ரித்திகா சிங்) இருவரும் பால்யம் முதலே நண்பர்கள். எதிர்பாராத சூழ் நிலையில் அர்ஜுனை மணக்க விரும்புகி றார் அனு. தோழிதானே என்று அர்ஜுனும் சம்மதம் சொல்லி, கரம் பற்றுகிறார். அவர்களது திருமண வாழ்க்கையில் மீரா (வாணி போஜன்) எதிர்ப்படும்போது அமளி துமளி ஆகிறது. அர்ஜுனையும், மீராவையும் சந்தேகிக்கும் அனுவால் பிரச்சினை வெடிக்க, இருவரும் சட்டப்படி பிரிந்துவிட முடிவெடுக்கின்றனர். அந்த சமயத்தில் என்ட்ரி கொடுக்கும் கடவுள் (விஜய்சேதுபதி), அர்ஜுன் தவறவிட்டதாக நினைக்கும் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க ஒரு வாய்ப்பு கொடுக்கிறார். அதை அர்ஜுன் எப்படி பயன்படுத்தினார், தம்பதி பிரிந்தார்களா, சேர்ந்தார்களா என்பது கதை.
ஆண் - பெண் நட்பு, அதில் துளிர்க்கும் காதல், அடுத்தகட்டமாக திருமணம், அதில் மலிந்திருக்கும் ‘பொசசிவ்னெஸ்’, பேசித் தீர்க்காமல் விவாகரத்தை தீர்வாக நினைப்பது என இன்றைய தலைமுறையின் முக்கிய சமூகச் சிக்கலுடன் ‘கடவுள்’ என்கிற தேவதைத் தன்மையை இணைத்து ரொமான்டிக் ஃபேன்டஸி படம் தர முயன்றுள்ளார் அறிமுக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து.
சில பல லாஜிக் மீறல்களைத் தாண்டி, எடுத்துக்கொண்ட கதைக் களத்தை நகைச்சுவை தடவி விறுவிறுப்பாக எடுத்துச் செல்கிறார். ஆனால், காட்சிகள் பெரும்பாலும் ஊகித்துவிடும் தன்மையுடன் இருக்கின்றன.
முதல் நாள் அலுவலகத்தில் அசோக் செல் வனுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி, மீராவால் அர்ஜுனுக்கு ஏற்படும் திருப்பம் ஆகியவை போல பெரும்பாலான காட்சிகளை சுவாரஸ்ய மாக அமைத்திருந்தால் அசத்தலான திரை அனுபவம் என்ற எல்லைக்குள் பிரவேசித் திருக்கும்.
அர்ஜுனாக அசால்ட் நடிப்பில் அசத்தியிருக் கிறார் அசோக் செல்வன். கண்ணியமான தோழன், அக்கறையும், கோபமும் கொண்ட கணவன், தனது பால்யத்தில் ஈர்ப்பு ஏற்படுத்திய பெண்ணிடம் உருகும் இளைஞன் என தனது கதாபாத்திரம் மையம் கொள்ளும் எல்லா சூழ்நிலைகளிலும் புகுந்து விளையாடுகிறார். என்றாலும் சில காட்சிகளில் மிகை நடிப்பு அப்பட்டமாக தெரிகிறது.
ரித்திகா சிங், வாணி போஜன் இருவருமே ஏற்ற கதாபாத்திரங்களை முன்னிறுத்திக் காட்டுவதில் போட்டி போட்டு நடிக்கின்றனர். இருவரில் வாணி போஜன் இளமைத் திருவிழாவாக வந்து செல்கிறார்.
இளமையும், காதலும் வழிந்தோடும் கதைக்கு விது அய்யண்ணாவின் ஒளிப்பதிவு மேலும் இளமை உணர்ச்சியைக் கூட்டுகிறது. பாடல்களால் கவரமுடியாத லியோன் ஜேம்ஸ் பின்னணி இசையால் ஈர்க்கிறார்.
‘ரீவைண்ட் பட்டன்’ வாழ்க்கையை இளமைக் கொண்டாட்டமாக காட்ட முயற்சிக் கும் துள்ளலான திரைக்கதையில், திருமணம் செய்துகொள்ளும் கடைசி நிமிடத்தில் மனம்மாறும் காதலியும், விவாகரத்துக்கு முன்பு விழித்துக்கொள்ளும் கணவனும் நூற்றுக்கணக்கான படங்களில் வந்துபோன மக்கிய பிரதிகள். இதுபோன்ற குறைகளைக் கடந்தும் ‘ஓ மை காட்’ சொல்ல வைத்து விடுகிறது படம்.