தமிழ் சினிமா

முதல் பார்வை: வானம் கொட்டட்டும்

சி.காவேரி மாணிக்கம்

ஒருவனைக் கொன்றுவிட்டு ஜெயிலுக்குப் போவதைவிட, ஒரு வசனத்தால் அவனைத் திருத்திவிட முடியும் என்பதை மண்டையில் கொட்டுவது போல உணர்த்தும் படம்தான் ‘வானம் கொட்டட்டும்’.

மனைவி ராதிகா, அண்ணன் பாலாஜி சக்திவேல், அம்மா மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் தேனியில் வசித்து வருகிறார் சரத்குமார். தேர்தல் பிரச்சினையில் ஒரு டீம் பாலாஜி சக்திவேலைக் கொலை செய்ய முயல, கோபமாகும் சரத்குமார், அந்த டீமில் இருவரைக் கொலை செய்துவிட, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார்.

சரத்குமார் மற்றும் அவருடைய முன்னோர்கள் போல தன் மகன் விக்ரம் பிரபுவும் கோபக்காரனாக/சண்டைக்காரனாக மாறிவிடுவானோ என்ற பயப்படுகிறார் ராதிகா. எனவே, மகன் விக்ரம் பிரபுவையும், மகள் ஐஸ்வர்யா ராஜேஷையும் அழைத்துக்கொண்டு சென்னை செல்கிறார்.

அங்கு ஒரு பிரின்டிங் பிரஸ்ஸில் வேலை பார்த்துக் குழந்தைகளைக் காப்பாற்றுகிறார். அவர்களும் வளர்ந்து பெரியவர்களாகின்றனர். இந்நிலையில், 16 ஆண்டுகள் தண்டனைக் காலம் முடிந்து திரும்புகிறார் சரத்குமார். வீட்டுக்கு வரும் அவரிடம் விக்ரம் பிரபுவும், ஐஸ்வர்யா ராஜேஷும் முகம் கொடுத்துப் பேச மறுக்கின்றனர்.

அத்துடன், சரத்குமார் செய்த சில காரியங்களும் அவர்களை எரிச்சலாக்குகின்றன. இன்னொரு பக்கம், சரத்குமாரால் கொல்லப்பட்டவரின் மகன்களில் ஒருவனான நந்தா, சரத்குமாரைக் கொலை செய்யும் நோக்கத்துடன் அலைகிறார். அதனால், சற்று சித்த பிரம்மை பிடித்தது போல் காணப்படுகிறார்.

நந்தாவிடம் இருந்து சரத்குமார் தப்பித்தாரா? பிள்ளைகள் இருவரும் அவருடன் ராசி ஆனார்களா? என்பது மீதிக் கதை.

கோபத்தில் அவசரப்பட்டு செய்யும் ஒரு காரியத்தால், சம்பந்தப்பட்டவர் மட்டுமின்றி, அவரைச் சார்ந்தவர்களும் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகின்றனர் என்பதுதான் படத்தின் அடித்தளம். ஆனால், அந்த அன்பின் உணர்வைக் கொஞ்சம் கூட பார்வையாளனுக்குக் கடத்தாமல் ‘தேமே’ எனச் செல்கிறது படம்.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு திரையில் கணவன் - மனைவியாக நடித்துள்ளனர் சரத்குமாரும் ராதிகாவும். இவர்களுக்கு இடையிலான எமோஷனலும் காதலும், இன்றைய தம்பதியர் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டிய படம். ஆனால், அதுவே மீண்டு மீண்டும் வருவது போரடிக்கிறது.

செல்வா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விக்ரம் பிரபு. நீண்ட நாட்களுக்குப் பிறகு அவருக்குப் பேர் சொல்லும்படமாக இது இருக்கும். அவருடைய தங்கையாக, மங்கை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் திறம்பட நடித்துள்ளார்.

கே மற்றும் சித் ஸ்ரீராம் இருவரும் இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர். சில இசைக்கருவிகளைக் கொண்டு கே ஏதோ செய்திருக்க, சித் ஸ்ரீராம் வாயாலேயே (குரலாலேயே) தன் பங்களிப்பை ஆற்றியிருப்பார் போல. படம் முழுக்க ஆங்காங்கே இரண்டு வரிகளாக, நான்கு வரிகளாகப் பாடியிருக்கிறார் சித் ஸ்ரீராம். முதலில் சூழ்நிலைக்கு ஏற்ப பாடத் தொடங்குபவர், போகப்போக படம் ஒரு பக்கம் போகட்டும், நான் வேறு பக்கம் பாடிக் கொண்டிருக்கிறேன் என தொடர்ந்து குரல் கச்சேரி நடத்துகிறார். இது மகா எரிச்சலை ஏற்படுத்துகிறது. அத்துடன், ‘கண்ணு தங்கம் ராசாத்தி’ பாடல் வரிகளைத் திரும்பத் திரும்பப் படம் முழுக்கப் பாடிக்கொண்டே இருக்கிறார் சித் ஸ்ரீராம். மெகா எரிச்சலை ஏற்படுத்திய இது, படம் முடிந்து டைட்டில் கார்டு போட்டு முடித்த பிறகும்கூட நிற்காமல் தொடர்வதுதான் சோதனை.

தன் அப்பாவைக் கொன்ற சரத்குமாரைப் பழிவாங்க, 16 வருடங்கள் நந்தா காத்திருப்பது ஏன்? அவ்வளவு வெறி என்றால், ஜெயிலுக்குள் சென்று அவரைக் கொலை செய்திருக்கலாமே... ஐஸ்வர்யா ராஜேஷ் காதலிப்பது சாந்தனுவையா, அமிதாஷையா என்பது தெளிவாகக் காட்டப்படவில்லை. சாந்தனுவைத்தான் அவர் காதலிக்கிறார் என்றால், பஸ்ஸில் அமிதாஷுடன் செல்லும்போது விக்ரம் பிரபு பார்த்துவிட்டார் என்பதற்காக இறங்கி ஓடுவது ஏன்?

தன் தங்கை ஒரு ஆணுடன் பஸ்ஸில் செல்வதைப் பார்த்தால், எந்த அண்ணனாவது பஸ்ஸில் ஏறி, தெருவுக்குத் தெரு அவளைத் துரத்துவானா? மடோனா செபாஸ்டியன், அவருடைய தந்தை சம்பந்தப்பட்ட காட்சிகள் இந்தக் கதையில் எதற்காக வைக்கப்பட்டன? ‘ஆயுதத்தைவிட அன்பு சிறந்தது’ என்ற கதைக்கு, வாழைக்காய் மண்டி பற்றிய இவ்வளவு விவரணைகள் எதற்கு? என ஏகப்பட்ட கேள்விகள் எழுகின்றன.

தூறல்களை, கொட்டும் மழையாக நம்ப வைக்க முயன்றுள்ளார் இயக்குநர் தனா. ஆனால், யாரும் நனையவில்லை என்பதுதான் உண்மை.

SCROLL FOR NEXT