விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கலக்கப்போவது யாரு?’ நகைச்சுவை நிகழ்ச்சி, தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாகும். இது 8 சீசன்களை கடந்து தற்போது 9-வது சீசன் தொடங்க உள்ளது. இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு வகையான போட்டியாளர்கள் பங்கேற்று, தங்களது நகைச்சுவை திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். இதற்காக 40-க்கும் மேற்பட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது சொந்த மாவட்டத்தின் அழகு பேச்சுத் தமிழை 5 நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்த உள்ளனர். சென்னை, கோவை, மதுரை, நெல்லை மாவட்டங்களில் இருந்து இவர்கள் வந்திருப்பதால், தமிழகத்தின் பலவிதமான வட்டார மொழிகளையும் ரசிக்கலாம். இந்த நிகழ்ச்சிக்கு ரம்யா பாண்டியன், வனிதா விஜயகுமார், ஈரோடு மகேஷ், மதுரை முத்து, ஆதவன் நடுவர்களாக இருக்கின்றனர். பல சீசன்களில் பங்கேற்ற அசார், நவீன் தொகுத்து வழங்குகின்றனர். வாரம்தோறும் 90 நிமிடத்துக்கு இடைவிடாத நகைச்சுவை உத்தரவாதம் என்கின்றனர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள். இந்த நிகழ்ச்சி வரும் 9-ம் தேதி ஞாயிறு தொடங்குகிறது.