மகளை தொலைத்த ஒரு தாயின் துயரம் மற்றும் தாயைப் பிரிந்த ஒரு குழந்தையின் தவிப்பை முன்வைக்கும் கதையாக ‘பொம்முகுட்டி அம்மாவுக்கு’ என்ற புதிய தொடர், விஜய் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. தாய், மகள் ஆகிய இருவரின் வாழ்க்கையிலும் அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்று விரிகிறது கதைக்களம்.
அழகிய நடனக் கலைஞர் மீரா. அவளது குழந்தை தங்கம். 2 வயதாகும்போது, எதிர்பாராத சூழலில் தன் மகள் தங்கத்தை தொலைத்துவிடுகிறார் மீரா. அதன் பிறகு, இன்னொரு குழந்தைக்கு தாயானபோதிலும், முதல் குழந்தையை இழந்த சோகத்தில் இருந்து மீளமுடியாமல் தவிக்கிறார். இதனால், கணவர் உட்பட குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து பல எதிர்ப்புகளையும் சந்திக்கிறார். நடனக் கலை ஒன்றே அவருக்கு ஆறுதலாக இருக்கிறது.
இதற்கிடையே தாயிடம் இருந்து தொலைந்துபோன குழந்தை தங்கம், ஒரு கொள்ளை கும்பலை சேர்ந்த வேணி என்ற பெண்ணிடம் சிக்குகிறாள். அக்கறை காட்டி வளர்த்தாலும், தங்கத்திடம் அவ்வப்போது கோபத்தையும் காட்டுகிறாள் வேணி. அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து, ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறாள் தங்கம். வேணியால் தனக்கு இடையூறு ஏற்படுமோ என்று அஞ்சுகிறாள்.
இந்த நிலையில் மீராவும், தங்கமும் சந்திக்கிறார்களா? இருவரது வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று நகர்கிறது தொடர்.
மீராவாக ரோஜா, தங்கமாக ரித்வா, வேணியாக நீபா நடிக்கின்றனர். பிரவீன் பென்னட் இயக்குகிறார்.