5-ம் மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பை நடிகர் தனுஷ் வரவேற்றுள்ளார்.
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத் திருத்தங்களின்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு, தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. இதற்குப் பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. பல்வேறு எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதனிடையே இந்த அறிவிப்பால் பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 5) நடப்பு ஆண்டில் நடைபெறுவதாக இருந்த 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு தனுஷ் தனது ட்விட்டர் பதிவில், "5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது. இது குழந்தைகளுக்கு மன அழுத்தத்திலிருந்தும், பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியையும், சமூகத்திற்கு சமத்துவ ஆரோக்கியத்தையும் நிலைபெறச்செய்யும். வாழ்த்துகள்.. நன்றி” என்று தெரிவித்துள்ளார் தனுஷ்.