தமிழ் சினிமா

ரம்யாகிருஷ்ணன் புகைப்படத்துக்கு குஷ்புவின் வித்தியாசமான பாராட்டு

செய்திப்பிரிவு

ரம்யாகிருஷ்ணனின் புகைப்படத்துக்கு குஷ்புவின் வித்தியாசமான பாராட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரவிவர்மனின் ஓவியங்களைப் போலவே, இப்போதைய முன்னணி நாயகிகளை வைத்து புகைப்படம் எடுத்துள்ளார் ஜி.வெங்கட்ராம். இந்தப் படங்கள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றன. பழங்காலத்தில் இருக்கும் ஓவியம் போலவே, இப்போதுள்ள நாயகிகளை நிற்க வைத்து தத்ரூபமாகப் புகைப்படம் எடுத்திருக்கிறார். இதற்காகப் பலரும் அவருக்குப் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

இந்தப் புகைப்படத்தில் குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், சமந்தா, ஸ்ருதிஹாசன், லிசி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர். இதில் ரம்யா கிருஷ்ணனின் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து குஷ்பு, "உன்னை என் நட்பு வட்டத்திலிருந்து நீக்கிவிடலாம் என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். நீ மிகவும் அழகாக இருக்கிறாய். உன் அழகைப் பார்த்து பொறாமையாக இருக்கிறது. என்ன செய்யலாம் என்று நீயே சொல்" என்று தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் ரம்யா கிருஷ்ணன், "உணவுக்கும் மரியாதைக்கும் நன்றி. லவ் யூ" என்று தெரிவித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன் குறித்த குஷ்புவின் பதிவு இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

SCROLL FOR NEXT