தமிழ் சினிமா

'நெற்றிக்கண்' ரீமேக்: தனுஷ் மும்முரம்

செய்திப்பிரிவு

ரஜினி நடித்த 'நெற்றிக்கண்' படத்தின் ரீமேக்கில் நடிக்க, தனுஷ் மும்முரமாகப் பணிபுரிந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

1981-ம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'நெற்றிக்கண்'. இயக்குநர் விசுவின் கதைக்கு, கே.பாலசந்தர் திரைக்கதை அமைந்திருந்தார். இதில் லட்சுமி, சரிதா, மேனகா, விஜயசாந்தி, கவுண்டமணி உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்திருந்தனர்.

கவிதாலயா நிறுவனம் தயாரித்த இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை ரீமேக் செய்ய விரும்புவதாக தனுஷ் பல பேட்டிகளில் கூறியிருந்தார். ஆனால், இது தொடர்பாக எந்தவொரு முடிவையும் எடுக்காமலேயே இருந்தார்.

தற்போது, இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளை தனுஷ் தொடங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போதுள்ள ரசிகர்களுக்கு ஏற்றவாறு கதையில் சிறு மாற்றங்களை மட்டும் செய்து நடிக்கத் திட்டமிட்டுள்ளார் தனுஷ்.

இந்த ரீமேக்கை யார் இயக்குவது என்பது உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் 'கர்ணன்' படத்தில் தனுஷ் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT