தமிழ் சினிமா

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: தமிழக அரசுக்கு சூர்யா நன்றி

செய்திப்பிரிவு

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்த தமிழக அரசுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத் திருத்தங்களின்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு, தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும் மாணவர்கள் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படாது என்றும் தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. இதற்குப் பலத்த எதிர்ப்புகள் எழுந்தன.

5, 8-ம் வகுப்பு மாணவர்கள் முதல் முறையாக பொதுத்தேர்வு எழுதவுள்ளதால் அவர்கள் சற்று அச்சத்துடன் இருந்தனர். மேலும், இந்த அறிவிப்பால் பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்திருந்தனர். இதனிடையே நடப்பு ஆண்டில் நடைபெறுவதாக இருந்த 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த அறிவிப்பு தொடர்பாக சூர்யா தனது ட்விட்டர் பதிவில் சிறு கடிதமொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், ''படிக்கும் வயதில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் கல்வியோட்டத்தில் இணைப்பது எத்தனை கடினமானதென்று அகரம் தன் களப்பணிகளில் உணர்ந்திருக்கிறது. மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்கு பொதுத்தேர்வு என்றும் தீர்வாகாது. 5-ம் மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கல்வி அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி'' என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT