புறம் பேச நேரமில்லை என்றும் அடக்கிக்கொண்டால் நல்லது என்றும் இயக்குநர் சேரன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன், சிருஷ்டி டாங்கே, இர்பான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ராஜாவுக்கு செக்'. இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், படம் பார்த்தவர்களோ இயக்குநர் சேரனின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்.
மேலும், சிலர் தொடர்ச்சியாக இயக்குநர் சேரனின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டுத் திட்டிக் கொண்டிருந்தார்கள். இது சமீபமாகத் தொடர்ந்து கொண்டே இருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:
''இது எனக்கான தளம்.. என்னைப் பிடித்த என்னைப் புரிந்த என் படங்களைப் பற்றி நல்ல புரிதல் உள்ளவர்கள் இங்கே இணைந்திருக்கிறோம். இது புரியாமல் என்னைப் பிடிக்காத சிலரும் மற்றவர்களைத் துதி பாட என்னை இகழ்பவர்களும் என்னைப் பின்தொடர்கிறார்கள். அவர்கள் தயவுசெய்து என்னைப் பின் தொடராமல் வெளியேறலாம்.
எங்களுக்கு நிறைய வேறு வேலைகள் உள்ளன. உங்களுக்கு மற்றவர்களைக் குறை சொல்லி அல்லது கேவலமாகப் பேசி அரிப்பைத் தீர்த்துக்கொள்ள நினைத்தால் அதை உங்கள் பக்கங்களில் செய்துகொள்ளலாம். யாரும் கேட்கப்போவதில்லை. என் பக்கம் வராதீர்கள். இங்கே புத்தியுள்ளவர்கள் சிந்திக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே.
வேறு யாரையும் இகழ்ந்து பேச என் முகமூடியை மாட்டி இருப்பவர்களும் தயவுசெய்து வெளியேறலாம். இந்தத் தொல்லைகளை எல்லாம் கவனிக்க, பதில் சொல்ல நேரமில்லை. ப்ளாக் பண்ணிய லிஸ்ட் மட்டும் குப்பை போல இருக்கிறது. நாங்கள் யாரைப் பற்றியும் கவலைப்பட, புறம் பேச நேரமில்லை. தேவையுமில்லை. அடக்கிக்கொண்டால் நல்லது''.
இவ்வாறு இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.