'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் பெரும் புகழ்பெற்ற லாஸ்லியா, தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகவுள்ளார்.
கடந்தாண்டு முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலரது பாராட்டையும் பெற்றார் லாஸ்லியா. அவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் எல்லாம் உருவானது. மேலும், கவினுடன் ஏற்பட்ட காதல் போன்ற சர்ச்சைகளிலும் சிக்கினார். அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன், லாஸ்லியா நாயகியாக நடிப்பார் என்று செய்திகள் வெளியானது.
ஆனால், படம் தொடர்பான எந்தவொரு அறிவிப்புமே வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 3) லாஸ்லியா நாயகியாக நடிக்கும் இரண்டு படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கும் 'பிரண்ட்ஷிப்' படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஆல்பர்ட் ராஜா இயக்கத்தில் ஆரி அர்ஜுனா நடிக்கவுள்ள படத்திலும் நாயகியாக நடிக்கவுள்ளார். இதில் சிருஷ்டி டாங்கேவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளது.
இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து லாஸ்லியாவை நாயகியாக நடிக்க வைக்க பல்வேறு இயக்குநர்கள் கதைகள் சொல்லியிருக்கிறார்கள். அவற்றில் எதை ஒப்புக் கொள்ளவுள்ளார் என்பது விரைவில் தெரியவரும்.