நீதிமன்றத் தீர்ப்பால் கடும் ஏமாற்றம் அடைந்திருப்பதாகவும், மேலும் நடிகர் சங்கத்தில் நிதியில்லை என்றும் கருணாஸ் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மீண்டும் 3 மாதத்துக்குள் தேர்தல் நடத்தி நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வேண்டும். கடந்த தேர்தல் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பால் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி கடும் அதிர்ச்சியடைந்தது. தற்போது மேல்முறையீடு செல்வதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது.
இதனிடையே விஷால் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ கருணாஸ், புதுக்கோட்டை நாடக நடிகர்கள் விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
''யார் மீது வேண்டுமானாலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சொல்லலாம். பொதுக்குழு சொன்னதற்காக இதே நீதிமன்றம்தான் தேர்தல் நடத்திக் கொள்ளலாம் என்று சொன்னது. அதேபோல் வாக்கு எண்ணிக்கையையும் இதே நீதிமன்றம் தான் சொன்னவுடன் எண்ணிக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறது. அதே நீதிமன்றம்தான் இப்போது 6 மாத காலம் தாமதமாக இந்தத் தேர்தல் நடத்தப்பட்டதால், இந்தத் தேர்தலை ரத்து செய்து மீண்டும் 3 மாதத்துக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது. இது எங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.
எங்களைப் போன்றவர்கள் நீதியரசர்களையும், நீதிமன்றத்தையும் தான் நம்பி இருக்கிறோம். எனக்கு இந்தத் தீர்ப்பு பேரதிர்ச்சிதான். நாங்கள் சொல்லியிருக்கும் அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரங்கள் உள்ளன. இதனால் பாதிக்கப்படப் போவது நலிந்த நாடக நடிகர்கள் தான்.
உண்மையிலேயே, தென்னிந்திய நடிகர் சங்கத்திலே நிதியில்லை. முழுமையாக இல்லை. இடைப்பட்ட காலத்தில் யாரெல்லாம் ஒன்றாக இருந்து, இந்தச் சங்கம் சிறப்பாக நடந்து வருகிறது என்று சொன்னார்களோ, அவர்கள்தான் பதவி வெறி காரணமாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். அவர்கள் சொல்லியிருக்கும் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை, பொய்யானவை என்பதை மேல்முறையீட்டிலே உறுதி செய்வோம்.
நிச்சயமாக இப்போதுள்ள வாக்குகள் எண்ணப்படும், நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒட்டுமொத்த நடிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறோம். இந்த தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடம் நிற்கிறது என்றால் அதற்கு முழு பொறுப்புமே ஐசரி கணேஷ்தான். வேறு யாருமே இதற்குக் காரணமல்ல. இந்தக் கட்டிடம் முடிந்தால் எல்லாப் பெயருமே பாண்டவர் அணிக்குச் சென்றுவிடும் என்ற காழ்ப்புணர்ச்சி காரணமாக, பணச் செல்வாக்கால் அராஜக முறையில் ஐசரி கணேஷ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பது என் தனிப்பட்ட குற்றச்சாட்டு.
நடிகர் சங்கத்தில் அரசியல் இருக்கிறது. எல்லா ஊரில் இருக்கும் ஒவ்வொரு சங்கத்திலும் உறுப்பினர்கள் இரண்டு அணிகளாகத் தான் இருக்கிறார்கள். அரசியல் இல்லை என்பது எல்லாம் சும்மா சொல்கிறார்கள்''.
இவ்வாறு கருணாஸ் பேசினார்.