'பிரண்ட்ஷிப்' எனும் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஹர்பஜன் சிங்
ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தேர்வாகி விளையாடத் தொடங்கியதிலிருந்து, தமிழில் அடிக்கடி ட்வீட் செய்வார் ஹர்பஜன் சிங். அதிலிருந்தே அவருக்கு ட்விட்டர் பக்கத்தில் தமிழ் ரசிகர்கள் அதிகமாயினர்.
இதனைத் தொடர்ந்து அவருக்குத் தமிழ்ப் பட வாய்ப்புகளும் வரத் தொடங்கின. சந்தானம் நடித்து வரும் 'டிக்கிலோனா' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஹர்பஜன் சிங். அதனைத் தொடர்ந்து ஒரு வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தற்போது, முதன்முதலாகத் தமிழ்ப் படமொன்றில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஹர்பஜன் சிங். 'பிரண்ட்ஷிப்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கவுள்ளனர். இந்தக் கூட்டணி இதற்கு முன்பாக 'அக்னிதேவி' எனும் படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் ஹர்பஜன் சிங்குடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கே படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு.
நாயகனாக அறிமுகமாகவுள்ளது குறித்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பதிவில், "நேற்று கீச்சு, சினிமா கதாபாத்திரம், இணையத் தொடர். இன்று 'பிரண்ட்ஷிப்' படத்தின் நாயகன், தமிழ் மக்களுக்கு நன்றி. திருக்குறள் டூ திரைப் பயணம் எல்லாம் சாத்தியப்படுத்தியது என் தலைவர், தல, தளபதி சின்னாளப்பட்டி சரவணன். அசத்துவோம்" என்று தெரிவித்துள்ளார்.