ஜீ தமிழ் சேனலில் 800 அத்தியாயங்களை கடந்து ஒளிபரப்பாகிவரும் ‘யாரடி நீ மோகினி’ தொடரில், மோகினியாக மிரட்டிவந்த யமுனா, சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் திகிலூட்ட வர உள்ளார்.
‘‘கதைப்படி இப்போது சின்ன இடைவெளியில் இருக்கிறேன். சீரியலில் முக்கிய திருப்பமாக அமைந்த திருமண அத்தியாயத்துக்கு பிறகு கதைப் பகுதி வேறொரு கோணத்தில் திரும்பியுள்ளதால் எனக்கு வேலையில்லை. வெகு விரைவில் மீண்டும் களம் திரும்ப உள்ளேன். சின்னத்திரை பயணத்தில் எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்த தொடர் இது. 800 அத்தியாயங்களில் என் பங்களிப்பு பெரிய இடம் வகித்திருப்பது மகிழ்ச்சி. அந்த மோகினியை மீண்டும் அடையாளப்படுத்துவேன். விரைவில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள வரலாற்றுத் தொடர் ஒன்றில் நடிக்க உள்ளேன். இதுதவிர 2 படங்களின் படப்பிடிப்பு நகர்ந்து வருகிறது. அதில் ஒன்றில் கதாநாயகியாக நடிக்கிறேன். விரைவில் அதுபற்றிய அறிவிப்பும் இருக்கும்’’ என்கிறார் யமுனா.