தமிழ் சினிமா

'நான் சிரித்தால்' உருவான விதம்; ஆதியின் சிரமம்: இயக்குநர் ராணா விளக்கம்

செய்திப்பிரிவு

'நான் சிரித்தால்' படம் உருவான விதத்தையும், ஆதியின் சிரத்தையையும் இயக்குநர் ராணா விளக்கமாகப் பேசியுள்ளார்.

சுந்தர்.சி தயாரிப்பில் ராணா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'நான் சிரித்தால்'. ஹிப் ஹாப் ஆதி நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா மேனன், வில்லனாக கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் கதைக்களம் குறித்து இயக்குநர் ராணா பேசியதாவது:

"படத்தின் தலைப்பு போலவே இது ஒரு முழு நீள நகைச்சுவைத் திரைப்படம். ஆனால், எந்த நகைச்சுவையும் திணிக்கப்பட்டதாக இருக்காது. கதையோடு ஒன்றிய நகைச்சுவையாக இருக்கும். குடும்பத்துடன் பார்த்து ரசித்துவிட்டு, போகும் போதும் நகைச்சுவையைக் கொண்டு செல்லலாம். இரண்டு மணிநேரம் சிரித்தோம் என்பதைத் தாண்டி, மன நிறைவு தரும் வகையில் நகைச்சுவையோடு ஒரு நல்ல கருத்தையும் கூறியிருக்கிறோம். இப்படத்தின் கதாநாயகன் பாத்திரத்தை எல்லோர் மனதிலும் இருக்கின்ற ஆதங்கங்களையும் வெளிப்படுத்துகிற மாதிரியாக அமைத்திருக்கிறோம்.

சென்னை மற்றும் பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். அதில் ஒரு முக்கியமான காட்சிக்காக கூடைப்பந்து உள்விளையாட்டு அரங்கிலும், ஒரு பாடலுக்காக காட்டுப் பகுதியிலும் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன், கலை இயக்குநர் பிரேம் இருவரும் அதிக சிரத்தை எடுத்து ஒவ்வொரு காட்சியையும் புதுமையாகக் காட்டியிருக்கிறார்கள்.

ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் திடுக்கிடும் வகையில் இருக்கும். கே.எஸ்.ரவிகுமார் சார் வில்லனாக நடித்திருக்கிறார். வழக்கமாக வரும் வில்லனாக இல்லாமல் அனைவரும் ரசிக்கும்படியான வில்லனாகவும், சிரிக்கும் படியாகவும் இருப்பார். அவரும், கதாநாயகனும் சந்திக்கின்ற காட்சிகளில் நகைச்சுவை கலந்த ஒரு த்ரில் இருக்கும்.

இப்படத்தின் சிறப்பம்சம், சவாலான விஷயம் கதாநாயகன் சிரிக்கின்ற காட்சிகள்தான். ஏனென்றால், அவர் நிறைய இடங்களில் சிரித்துக்கொண்டே இருப்பார். அப்படி அவர் சிரிக்கும்போது காட்சிக்குத் தகுந்தவாறு பார்வையாளர்களுக்குச் சிரிப்பும், நகைச்சுவையும், பயமும், பரிதாபமும் ஏற்பட வேண்டும். கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்தால் மட்டுமே இதைச் செய்ய முடியும். மேலும், அவர் சிரிக்கும் ஒவ்வொரு காட்சியிலும் அதிக கவனத்துடன் இருந்தால் மட்டுமே பார்வையாளர்களைத் திருப்திப்படுத்த முடியும்.

இயக்குநர் ஷங்கரிடம் ’2.O’ படத்திற்காக பணியாற்றிக் கொண்டிருக்கும்போது யூடியூபில் ஒரு குறும்படத்தை வெளியிட்டோம். அது வைரலானது. அப்போது ஆதி அந்தக் குறும்படத்தைப் பார்த்து விட்டு நன்றாக இருக்கிறதே என்று கூறினார். நான் அந்தக் குறும்படத்தைத் திரைப்படமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். சிரிப்பதுதான் அப்படத்திற்கு அடித்தளம். அதற்குச் சிரிக்கும் முகமும் அதேசமயம், முகத்தில் அப்பாவித்தனமும் இருக்க வேண்டும். அதற்கு ஆதி பொருத்தமாக இருப்பார் என்று திடமாக நம்பினேன். கதை எழுதி முடித்ததும் நீங்கள் பார்த்த குறும்படத்தின் முழு நீளக் கதைதான் இது என்று ஆதியிடம் கூறினேன். அவருக்கும் அது பிடித்திருந்தது. அதேபோல் இப்படம் உருவாக முக்கியக் காரணம் தயாரிப்பாளர் சுந்தர்.சி.தான்.

இதுவரை 'ஹிப்ஹாப்' ஆதி நடித்த இரண்டு படங்களிலேயே இந்தப் படத்தில்தான் கடின முயற்சி எடுத்து நடித்திருக்கிறார். இரண்டு படங்களிலும் அவர் அவராகவே நடித்திருப்பார். இந்தப் படத்தில்தான் வேறு ஒரு நபராகத் தன்னை மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார்.

’நான் சிரித்தால்’ என்னுடைய முதல் படம் என்பதால் என்னுடைய முழு கவனமும் இந்தப் படத்தில்தான் இருந்தது. பல கதைகளைப் படமாக்க வேண்டும். ஒவ்வொரு படத்தையும் ஆத்மார்த்தமாக எடுக்க வேண்டும். அது நம்மை உற்சாகப்படுத்தும்படியாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்”.

இவ்வாறு இயக்குநர் ராணா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT