தமிழ் சினிமா

சரத்குமாரிடம் பிடித்தது, பிடிக்காதது? - ராதிகா பதில்

செய்திப்பிரிவு

சரத்குமாரிடம் பிடித்தது, பிடிக்காதது என்ன என்பது குறித்து ராதிகா பதில் அளித்துள்ளார்

மணிரத்னம் தயாரிப்பில் தனா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வானம் கொட்டட்டும்'. விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு, மடோனா செபாஸ்டியன் ஆகியோருடன் சரத்குமார் - ராதிகா ஜோடியும் இணைந்து நடித்துள்ளது. 'சூர்யவம்சம்' படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கும் படம் 'வானம் கொட்டட்டும்' என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் தயாரிப்பில் சரத்குமாருடன் இணைந்து நடித்தது குறித்து ராதிகா கூறியதாவது:

"என்னையும் சரத்குமாரையும் பொறுத்தவரை, செய்யும் செயலுக்கு நாங்கள் இருவரும் முக்கியத்துவம் கொடுப்போம். செய்கின்ற வேலையை விருப்பத்துடன் செய்கிறோம். ஆகையால்தான், பல துறைகளிலும் திறமைகளை வெளிப்படுத்த முடிகிறது.

இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என நினைத்ததில்லை. பலர் இணைந்து நடிப்பதற்காகக் கூறிய கதை எதுவுமே பிடிக்கவில்லை. 'வானம் கொட்டட்டும்' கதையை தனா கூறியதுமே இருவருக்கும் பிடித்துவிட்டது. படப்பிடிப்பு நடத்திய விதமும், கதாபாத்திரங்கள் அமைந்த விதமும் மிக அழகாக இருந்தது. இந்தப் படத்தில் சரத்குமார் கதாபாத்திரம் தீவிரமானதாக இருக்கும். நடிப்பில் இருவருக்கும் எப்பொழுதும் போட்டி இருந்தது கிடையாது.

பொதுவாக நான் மாலை 6 மணிக்கு மேல் பணியாற்ற மாட்டேன். ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்ற மாட்டேன். இதுவரை இப்படித்தான் இருந்து வந்தது. ஆனால், இந்தப் படத்தில் விதிவிலக்காக மாறிவிட்டது. இயக்குநர் தனாவைப் பொறுத்தவரை கதை எப்படி இருக்க வேண்டும், அதை எப்படிக் காட்சிப்படுத்த வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருப்பார். தேவையில்லாத காட்சிகளை எடுத்து நேரத்தை வீணடிக்க மாட்டார்.

மேலும், நான் செய்யும் வேலைக்கு முன்னுரிமை கொடுப்பேன். தினமும் யோகா செய்வேன். இருவருமே உணவில் கவனத்துடன் இருப்போம். இந்த ஒழுக்கம்தான் எங்களைச் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கிறது. சரத்குமார் அருமையான மனிதர் மற்றும் அவருடைய விடா முயற்சி இரண்டும் அவரிடம் பிடித்த விஷயங்கள். கர்ணனே வெட்கப்படும் அளவிற்கு தானம் செய்வதும், அதிலும் உண்மையாகவே உதவி தேவையா என்று ஆராயாமல் செய்வதும் அவரிடம் பிடிக்காது".

இவ்வாறு ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT