தமிழ் சினிமா

10-வது ஆண்டு போஸ்டர் வெளியிட்ட’தமிழ்ப் படம்’ குழு: இதிலுமா குறும்பு?

செய்திப்பிரிவு

'தமிழ்ப் படம்' வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதையொட்டி, படக்குழுவினர் தற்போதுள்ள போராட்டத்தை முன்வைத்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

2010-ம் ஆண்டு சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'தமிழ்ப் படம்'. அதற்கு முன்பாக வெளியான தமிழ்ப் படங்களின் காட்சிகளைக் கிண்டல் செய்து இப்படத்தின் காட்சிகளை அமைத்திருந்தார்கள். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு இதன் 2-ம் பாகம் வெளியானது.

இப்போது வரை எந்தவொரு தமிழ் படம் வெளியானாலும், இந்தக் காட்சி 'தமிழ்ப் படம்' பாணியில் கிண்டல் செய்ய ஏதுவானது எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், 'தமிழ்ப் படம்' மற்றும் 'தமிழ்ப் படம் 2' ஆகிய படங்களை விளம்பரப்படுத்தப் படக்குழுவினர் வெளியிட்ட போஸ்டர் வடிவமைப்புகள் இணையத்தில் பெரும் வைரலாகின.

இந்நிலையில், 'தமிழ்ப் படம்' வெளியாகி இன்று (ஜனவரி 29) 9 ஆண்டுகளை நிறைவு செய்து, 10-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனைக் கொண்டாடும் வகையில் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதிலும் தங்களுடைய வித்தியாசத்தைக் காட்டியுள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைத் தேவையில்லை என்றும், அந்தப் போராட்டத்துக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்துள்ளது. இது தொடர்பாக 'தமிழ்ப் படம்' படக்குழுவினர் வெளியிட்டுள்ள போஸ்டரில் 'NO CAA', ’NO NPR’, ’NO NRC’ என்று தெரிவித்துள்ளது.

மேலும், தங்களது குறும்புத்தனத்தையும் இந்தப் போஸ்டரில் படக்குழுவினர் வெளிப்படுத்தியுள்ளனர். என்னவென்றால் CAA - Cutout Atrocities by Agilaulaga Superstar (கட் அவுட் அராஜகம் பண்ணாத அகில உலக சூப்பர் ஸ்டார்), NPR - Nonsensical Problem during Release (வெளியீட்டின் போது அர்த்தமற்ற பிரச்சினைகள்), NRC - Nadigar sangam Related Controversies (நடிகர் சங்கம் தொடர்பான பிரச்சினைகள்) என்று தெரிவித்துள்ளது.

மேலும் ’ஒரே மாதிரியான விஷயங்களிலிருந்து விடுதலை’ என்று தங்களுடைய போஸ்டரிலிருந்து விடுதலை எனவும் குறிப்பிட்டுள்ளது. அதாவது, தமிழ் சினிமாவில் ஒரே மாதிரியான கதைக்களங்களிலிருந்து விடுதலை அளித்த படம் என்பது இதன் பொருளாகும்.

'தமிழ்ப் படம்' ரசிகர்கள் மத்தியில் இந்தப் போஸ்டர் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் படக்குழுவினருக்கும், இந்தப் படத்தின் தயாரிப்பில் இறங்கிய ஓய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT