தமிழ் சினிமா

பியர் கிரில்ஸ் நிகழ்ச்சி; நீர்நிலை பாதுகாப்பு குறித்து ரஜினி விழிப்புணர்வு?

செய்திப்பிரிவு

ரஜினியுடன் படப்பிடிப்பு நிறைவடைந்தது தொடர்பாக பியர் கிரில்ஸ் நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார்.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியின் நாயகன் பியர் கிரில்ஸ், அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படித் தப்பி வருவது குறித்து மக்களுக்குக் கற்றுத் தருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, இந்தியப் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ரஜினியும் கலந்து கொண்டார். இதற்கான படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் நடைபெற்றது.

2 நாட்கள் நடந்த இந்தப் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் ரஜினி.

இதனிடையே ரஜினி தனது நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து பியர் கிரில்ஸ் தனது ட்விட்டர் பதிவில், "தொலைக்காட்சி வரலாற்றில் (3.6 பில்லியன்) சாதனை புரிய உதவிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான எனது நிகழ்ச்சிக்குப் பிறகு இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் முறையாக டிஸ்கவரி சேனலில் நமது ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ நிகழ்ச்சியில் என்னோடு இணைகிறார்" என்று தெரிவித்துள்ளார்.

பியர் கிரில்ஸின் ட்வீட்டை மேற்கோளிட்டு டிஸ்கவரி சேனல் இந்தியா நிறுவனம், "இந்தியப் பிரபலங்களுடனான நமது பயணத்தின் தொடர்ச்சியாக, நரேந்திர மோடிக்குப் பிறகு ரஜினிகாந்த் முதல் முறையாக தொலைக்காட்சியில் ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ நிகழ்ச்சியில் இணைவதிலும், நீர்நிலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் மகிழ்ச்சி அடைகிறோம்" என்று தெரிவித்துள்ளது.

ரஜினிகாந்த் பல பேட்டிகளில் தண்ணீர் பற்றாக்குறை தொடர்பாகப் பேசியுள்ளார். மேலும், நதிகள் இணைப்பு மட்டுமே இதற்குத் தீர்வு என்றும் தெரிவித்துள்ளார். டிஸ்கவரி சேனல் ட்வீட்டை வைத்துப் பார்த்தால், இந்த நிகழ்ச்சியிலும் நீர்நிலைகள் தொடர்பாகப் பேசியிருப்பது தெளிவாகிறது.

இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் ரஜினிக்குக் காயம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், தனக்குக் காயம் ஏற்படவில்லை என்றும் சில முட்கள் குத்தின என்றும் ரஜினி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT