தமிழ் சினிமா

மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - விக்னேஷ் சிவன்

செய்திப்பிரிவு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். அந்தப் படம் 'ஸ்பெஷல் 26' என்ற இந்திப் படத்தின் ரீமேக்காகும். அதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். அந்தக் கதையில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க, லைகா நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.

ஆனால், பொருட்செலவு அதிகமாகத் தேவைப்படுவதால் அந்தப் படம் கைவிடப்பட்டது. இதனால், புதிய கதையொன்றை தயார் செய்தார் விக்னேஷ் சிவன். அதில் நடிக்க விஜய் சேதுபதியை அணுகினார். அவருக்கும் அந்தக் கதைப் பிடித்திருப்பதால், மே மாதம் படப்பிடிப்புக்குச் செல்லவுள்ளனர்.

தற்போது 'மாஸ்டர்' படத்தின் உலகளாவிய உரிமையையும், விக்ரம் நடித்து வரும் 'கோப்ரா' படத்தையும் தயாரித்து வரும் லலித் இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளார். விஜய் சேதுபதி நாயகனாக நடித்து வரும் 'துக்ளக் தர்பார்' படத்தையும் லலித் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

2015-ம் ஆண்டு விஜய் சேதுபதி - விக்னேஷ் சிவன் கூட்டணி இணைந்து ’நானும் ரவுடிதான்’ என்ற மாபெரும் ஹிட் படத்தைக் கொடுத்தது. தனுஷ் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தின் பாடல்கள் தற்போது வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

SCROLL FOR NEXT