தமிழ் சினிமா

'டகால்டி' Vs 'சர்வர் சுந்தரம்' ரிலீஸ் பிரச்சினை; பாரதிராஜா தலையீட்டால் முடிவுக்கு வந்தது

செய்திப்பிரிவு

'டகால்டி' மற்றும் 'சர்வர் சுந்தரம்' வெளியீட்டுப் பிரச்சினை தொடர்பாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது.

18 ரீல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள 'டகால்டி' ஜனவரி 31-ம் தேதி வெளியாகும் என அறிவித்தது படக்குழு. விஜய் ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரித்திகா சென், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'டகால்டி' படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தீவிரமாகத் தொடங்கப்பட்ட வேளையில், கெனன்யா பிலிம்ஸ் நிறுவனமும் தங்களுடைய தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள 'சர்வர் சுந்தரம்' படத்தை ஜனவரி 31-ம் தேதி வெளியிடுவதாக அறிவித்தது. பால்கி இயக்கியுள்ள இந்தப் படம் தயாராகி நீண்ட மாதங்கள் ஆகின்றன. ஆனால், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பைனான்ஸ் சிக்கலால் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.

இரண்டு படங்களும் போட்டி போட்டு விளம்பரப்படுத்தியதால், விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் சிக்கல் உருவானது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருந்தனர். இறுதியில், பாரதிராஜா தலையிட்டுப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமுகமான முடிவு எட்டப்பட்டுள்ளது.

அதன்படி ஜனவரி 31-ம் தேதி 'டகால்டி' படமும், பிப்ரவரி 14-ம் தேதி 'சர்வர் சுந்தரம்' படமும் வெளியாகவுள்ளது. நீண்ட நாட்களாக நிலவி வந்த குழப்பம் இதன் மூலம் தீர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT