படம்: பு.க.பிரவீன் 
தமிழ் சினிமா

‘சைக்கோ’ படத்தில் சிசிடிவி இல்லாதது ஏன்? -மிஷ்கின் விளக்கம்

செய்திப்பிரிவு

‘சைக்கோ’ படத்தில், ஒரு இடத்தில் கூட சிசிடிவி இல்லாதது ஏன்? என்று வைக்கப்பட்ட விமர்சனத்துக்குப் பதில் அளித்துள்ளார் மிஷ்கின்.

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘சைக்கோ’. உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ், ராஜ்குமார், இயக்குநர்கள் ராம் மற்றும் சிங்கம்புலி, பவா செல்லத்துரை, ரேணுகா ஆகியோர் இந்தப் படத்தில் நடித்தனர். இளையராஜா இசையமைத்த இந்தப் படத்துக்கு, தன்விர் மிர் ஒளிப்பதிவு செய்தார். டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்தது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம், கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

படத்தின் ப்ரமோஷனை முன்னிட்டு, படம் வெளியாவதற்கு முன்பும் பின்பும் பேட்டிகள் கொடுத்து வருகிறார் மிஷ்கின். அதில், எதிர் விமர்சனங்களில் முன்வைக்கப்பட்ட முக்கிய விஷயமான, ‘ஒரு இடத்தில் கூட சிசிடிவி இல்லையா?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு, “அந்த இடத்துல சிசிடிவி இல்ல. என்னாச்சு இப்போ? தியேட்டரில் படம் பார்த்துக்கிட்டு இருக்கீங்க. கொலை பண்ற காட்சி வருது. கொலைகாரன் எப்படிக் கொலை பண்றான்னு பார்க்காம, ஏன் சிசிடிவியைத் தேடுறீங்க?

‘துப்பறிவாளன்’ படத்தில் சிசிடிவி காட்சியை வைத்துதான் விஷால் கொலையாளியைக் கண்டுபிடிப்பார். ‘சைக்கோ’ படத்திலும் சிடியில் இருக்கும் கல்லூரி விழா காட்சியை வைத்துதான் அடையாளம் கண்டுபிடிக்கின்றனர்.

ஒரு கொலைகாரன், கடத்தும்போது அல்லது கொலை செய்யும்போது, சிசிடிவி இல்லாத இடத்தில் செய்வான். ஒருவேளை சிசிடிவி இருந்திருந்தால், அதை அப்புறப்படுத்திவிட்டு செய்வான். அப்படி நடக்கும் பட்சத்தில், கொலைகாரன் சிசிடிவி இருக்கும் இடங்களைத் தேடி, முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு, அதை அடித்து நொறுக்கும் காட்சியை முதலில் வைக்க வேண்டும்.

அதன்பிறகு, கொலை செய்யப்படும் காட்சி. அதனைத் தொடர்ந்து போலீஸ் சிசிடிவியைத் தேடும் காட்சி, அப்புறம் ஹீரோ அண்ட் கோ சிசிடிவியைத் தேடும் காட்சி என ஒவ்வொரு கொலைக்கும் இப்படி வைத்துக்கொண்டே போனால், படம் பார்க்கும் உங்களுக்கு போரடிக்குமா, அடிக்காதா?

அதனால், எடிட்டரிடம் சொல்லி அதுபோன்ற காட்சிகளை நீக்கிவிட்டேன். சிசிடிவி இருந்து, கொலைகாரன் அதை அப்புறப்படுத்திவிட்டதாக நீங்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும். நான் சொன்னது ஒருகதை, சொல்லாதது இன்னொரு கதை.

‘50 சதவீத கதையைத்தான் நான் சொல்வேன், மீதி 50 சதவீதத்தை நீங்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும்’ என ஏற்கெனவே சொல்லிவிட்டேன்” எனப் பதில் அளித்துள்ளார் மிஷ்கின்.

SCROLL FOR NEXT