ராதிகாவிடம் பிடிக்காத விஷயம் என்னவென்று சரத்குமார் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் தயாரிப்பில் தனா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வானம் கொட்டட்டும்'. விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு, மடோனா செபாஸ்டியன் ஆகியோருடன் சரத்குமார் - ராதிகா ஜோடியும் இணைந்து நடித்துள்ளது. 'சூர்யவம்சம்' படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கும் படம் 'வானம் கொட்டட்டும்' என்பது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னம் தயாரிப்பில் நடித்தது குறித்து சரத்குமார் கூறியதாவது:
"சினிமா, அரசியல், தயாரிப்பு, எழுத்தாளர், பாடகர் என்று பன்முக வேலைகளில் சுறுசுறுப்பாக இயங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அண்மையில் சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்தேன். அப்போது தான் 'வானம் கொட்டட்டும்' படத்தின் கதையை தனா என்னிடமும், ராதிகாவிடமும் கூறினார்.
கதையைக் கேட்டதும் இருவருக்கும் பிடித்திருந்தது. மண் மணம் மாறாமல் ஒரு குடும்பத்தில் நடக்கக்கூடிய சம்பவங்கள், வெற்றி- தோல்விகள் ஆகியவற்றை எப்படிச் சந்திக்கின்றார்கள் என்பதுதான் படத்தின் கதை. இதில் நடிப்பதில் எங்கள் இருவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி. இப்படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவருமே அவரவர் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
மேலும், ராதிகா சில விதிமுறைகளை வைத்திருப்பார். ஆனால், இப்படத்திற்காக அதை மீறிப் பணியாற்றினார். ஆரோக்கியம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும். ஆகையால், உடலை ஆரோக்கியமாகப் பார்த்துக் கொள்ளத் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று என் தந்தை கூறியதை நான் பின்பற்றி வருகிறேன். அது தான் நான் சுறுசுறுப்பாக இயங்கக் காரணம்.
ராதிகாவிடம் கோபம் மட்டும்தான் பிடிக்காத விஷயம். அதைத் தவிர மற்ற அனைத்து விஷயங்களும் பிடிக்கும். கோபத்தை உடனே வெளிப்படுத்தக் கூடாது என்பது எனது கருத்து”.
இவ்வாறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.