கேரளாவில் விஜய் நடித்த 'சுறா' படத்தின் மறுவெளியீட்டை அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள்.
கேரளாவில் உள்ள பெரிய நடிகர்களுடைய படங்களின் வசூலுக்கு நிகராக, விஜய் படங்களின் வசூல் இருக்கும். அந்தளவுக்கு விஜய்க்கு அங்கு ஏராளமான ரசிகர் மன்றங்கள் இருக்கிறது. விஜய் நடித்த 50-வது படமான 'சுறா', 2010-ம் ஆண்டு வெளியானது. தற்போது கேரளாவில் கொல்லத்தில் இருக்கும் ஜி மேக்ஸ் திரையரங்கில் நேற்று (ஜனவரி 26) மீண்டும் திரையிடப்பட்டது.
இந்த தசாப்தத்தில் மறு வெளியீடாக வரும் முதல் விஜய் திரைப்படம் என விஜய் ரசிகர்கள் இதனைக் கொண்டாட பிரத்யேக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். நேற்று விஜய் ரசிகர்கள் மேள தாளங்கள் முழங்க, 'சுறா' வெளியீட்டைக் கொண்டாடும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. திரையரங்கிற்குள் விஜய்யின் அறிமுகக் காட்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோ இதோ:
எஸ்பி ராஜ்குமார் இயக்கியிருந்த இந்தப் படத்தில் தமன்னா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மணிசர்மா இசையமைத்திருந்தார். ஆனால் வெளியான சமயத்தில் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்ற ’சுறா’ எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.